FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




சரிக்கு சரி கட்டுதல் - சகோ அருள், DINDIGUL

Sarikku Sari Kattuthal

Tamil Phrase Poetry

Tamil Phrase Poetry

நீதியும் நியாயமும் சிங்காசனத்தின் ஆதாரமாய் கொண்டவர், 
பாதியும்... மீதியுமாய் எதையும் செய்ய மாட்டார். 
நியாயத்தை தூக்கு நூலாய் கொண்டிருப்பவர், 
அநியாயத்தை ஒருபோதும் சகிக்க மாட்டார்;

இதோ: தான் தெரிந்து கொண்ட யாக்கோபுவுக்கு, ஆசிர்வாதத்தையும் சாபத்தையும் முன்வைத்தவர், பணிந்தபோது பாசத்தையும்... மீறி துணிந்த போது கோபத்தையும் காட்டினார்;
கீழ்ப்படியாத நாளுக்கொப்பாக தண்டனையால் சரிக்கு சரி கட்டினார்.

அத்திமரம்தான்...ஆனாலும் அது சத்துவமற்றுப்போனது; 
சிங்கம் போல நடந்தவர்கள் அசிங்கமாய் தள்ளப்பட்டனர். கெம்பீரமாய்க் கூடினவர்கள்... கொடூரமாய் சிதறடிக்கப்பட்டனர்; மீட்கிறவர் சீயோனிலிருந்து வரும் வரைக்கும், மீன்பிடிப்பவர்களின் தூண்டில் முள்ளால்
துவண்டு போனார்கள்;

ரத்தப்பழியைக்... கேட்டு வாங்கினவர்கள், 
குற்றப்பழி தீரும்வரை பறக்கடிக்கப்பட்டனர்;

இதோ... நல்ல ஒலிவ மரத்திலே, காட்டு ஒலிவக்கிளை ஒட்டப்பட்டது.
தரித்திர லாசரு ஆபிரஹாம் மடிக்கு உயர்த்தப்பட்டார்.
மோவாபிய ரூத் போவாசின் போர்வையால் மூடப்பட்டாள்; எளிமையான எஸ்தர்--அகாஸ்வேருவின் செங்கோலால் ஆதரிக்கப்பட்டாள்! 

என்ன ஆச்சர்யம், எத்துனை அதிசயம்,
ஒன்றுமில்லாமையில் சகலத்தையும் உண்டாக்கனவர்
ஒரு பொருட்டாய் என்னையும் எண்ணினார்;
அடிபட்ட வழிப்போக்கனான என்னை..

நல்ல சமாரியன் காப்பாற்றி சத்திரத்தில் சேர்ந்தார். 
ஆனாலும், சந்தர்ப்ப சூழலிலும், சரீரத்தின் மாயத்திலும்,
விழுந்து எழும் நிர்ப்பந்தமான மனிதனானேன் நான்;

ஜான் அளவு ஏற்றம் கண்டு,
முழம் அளவு வழுக்கும் தன்மையால், ஏழு தரம் விருந்தாலும்... ஏழாம் முழுக்கில் குணமாகவே விரும்புகிறேன்,
நான்!

கழுகின் பார்வையில் கோழிக் குஞ்சுகளைப் போல், தப்பித்.. தப்பி பிழைக்கிறேன்;

சரிக்கு -சரிக்கட்டுதல் எனக்குள் நடந்திருந்தால். சரிந்தே போயிருப்பேன் நான்- மண்ணோடு.... மண்ணாக;

ஆம்: நீதி மாறவில்லை. இங்கே. நீதி நிறைவேற்றப்பட்டது;

உன் மேல்வரும் சாபம். என் மேல் வரட்டும்,
என்று யாக்கோபுவை காப்பாற்றின ரெபேக்காள் போல

தாய்க் கோழியாம் கிறிஸ்துவின் புண்ணிய செட்டைகள்,
என்னை நீதியின் தாக்கத்துக்கு தகுதி படுத்தியது.

கிருபாசனத்தின் சலுகைகள் என்னை... உறுதிபடுத்தியது;

பரிந்து பேசுகிறவரின் புண்ணியம்.. என்னை, சுத்தப்படுத்துகிறது.

மாம்சத்திலும்.. ஆவியிலும் உள்ள அசுத்தங்களை, 
என் ஆண்டவர் அளித்த நீதியின் வஸ்திரம், முடிப் பளிச்சிடச் செய்கிறது. 
இவராலேயே சரிக்கு சரி கட்டுதல் என்னில் நீங்கி, படிக்குப் படி மேலேறும் பாக்கியம் பெற்றேன்,
நான்!

நம் முடைய பாவங்களுக்குத் தக்கதாக, நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்கு "சரிகட்டாமலும்" இருக்கிறார்!!
சங்கீதம் 103:10

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்.
1 யோவான் 1:7

ஆமென்!!!

Comments