THE HIDDEN TREASURE
நிலத்தில் மறைந்திருந்த புதையல் - உவமை
இந்த பாடத்தில் மத்தேயு 13 ஆம் அதிகாரத்தில், நம் ஆண்டவர் கூறிய மறைக்கப்பட்ட பொக்கிஷம் உவமைக்குள், கடவுள் ஒளித்து வைத்துள்ள ரகசியத்தை அறிவோம்.
மத்தேயு 13:44
"ஒரு மனிதன் - நிலத்தில் மறைந்திருந்த புதையல்/பொக்கிஷம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் - கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு / பொக்கிஷத்திற்க்கு ஒப்பாகும்".
உவமையில், அந்த புதையலை கண்ட மனிதர், ஏதோ ஒரு வேலை செய்வதற்காக அந்த நிலத்திற்கு சென்றிருக்க வேண்டும். அங்கு அவர் கண்ட புதையலை உடனே எடுக்காமல், அதை பிறர் அல்லது திருடன் யாரும் எடுத்துக் கொள்ளாதபடி, யாரும் காணாதபடி அதை மண்ணுக்குள் மூடி மறைத்து வைக்கிறார். பின், புதையலை கண்ட பெருமகிழ்ச்சியில், அதை கொள்ளுமாறு, அந்த நிலத்தின் உரிமையாளரிடம் பேசி, அவருடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை சட்டப்படி தனதாக்கி, அந்த புதையலின் உரிமையாளர் ஆகிறார்.
நிலம் எதை அடையாளப்படுத்தும்:
நிலம் = உலகம் = உலக மக்கள்
(மத்தேயு 13:38)
புதையலை கண்ட அந்த மனிதர் யார்?
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
ஏசாயா 45:3,4
"இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்: பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்."
இந்த இறைவார்த்தை, பாபிலோனை - ஐப்பிராத்து நதியை தனது போர் சேவகர் துணை கொண்டு, வற்றி போக செய்து கைப்பற்றிய சைரஸ் மன்னரை பற்றிய தீர்க்கதரிசனம். அந்த சைரஸ் மன்னர், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறார் என்பதை அடிப்படை வகுப்பில் பாபிலோனின் நியாயத்தீர்ப்பு பாடத்தில் படித்தோம்.
புதையல் யாரை அடையாளப்படுத்தும்?
விசுவாசத்தை காத்து கொண்ட/கொள்ளும் இறைமக்கள்.
கொலோசேயர் 3:3
உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே கடவுளுக்குள் மறைந்திருக்கிறது.
பொன்னைப்போல இருக்கும் திருச்சபையும், வெள்ளியைப்போல இருக்கும் திரள்கூட்டத்தாரும் அவருடைய சம்பத்தாயிருக்கின்றனர்.
ஆகாய் 2:8
"வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்"
மல்கியா 3:17
"என் சம்பத்தை சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாய் இருப்பார்கள்"
ஏசாயா 13:12
"புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஒப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்"
என்று ஆயிரவருட அரசாட்சியில் இவ்வுலக ஜனங்களும் அவருடைய சம்பத்தாய் மாற்றப்படுவதைக் குறித்து இவ்வசனம் நமக்கு தீர்க்கதரிசனமாய் கூறியுள்ளது.
வாசிக்கவும்:
புதையலை மறைத்து வைத்தல் எதை அடையாளப்படுத்தும்?
ஆனால், அனைவரும் (சபை, திரள்கூட்டம், இஸ்ரயேல் ஜனங்கள் மற்றும் உலக ஜனங்கள்) பூமிக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அதாவது மரணத்துக்குள்ளான நிலையில் இருக்கின்றனர். இவர்களை மரணத்திலிருந்து மீட்கவேண்டுமெனில் அதற்குண்டான விலைக்கிரயத்தை முதலில் தரவேண்டும்.
யோவான் 10:28,29
"நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது."
2 தெசலோனிக்கெயர் 3:3"ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்."
தாம் கண்டெடுத்த புதையலாகிய இறைமக்களை, திருடன் = பிசாசிடம் அகப்படாமல் திருச்சபையாகிய நம்மை காக்கிறார்.
நிலத்தை வாங்குதல்:
நம் ஆண்டவர் கடவுளின் சட்டப்படி, மனுக்குலத்தை மீட்க தன்னுயிரை சிலுவையில் மாய்த்து உலக மக்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டது.
உவமையில் கூறப்பட்ட பிரகாரம், ஒரு மனுஷன் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று நிலத்தைக் கொண்டதுபோல, நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னுடைய ஜீவனையே விலைக்கிரயமாக கொடுத்து இந்த பூமியையும் அதிலிலுள்ள யாவையும் பிதாவிடமிருந்து வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் நம்மைச் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" (தீத்து 2:14).
இந்த உவமைக்கு பொருந்தும் வகையில் பழைய ஏற்பாட்டில் நடந்த ஒரு சம்பவமானது, எரேமியா தேவனுடைய கட்டளையின்படி ஒரு நிலத்தை வாங்கினதாகும்.
எரேமியா 32:9
"ஆகையால், என் பெரிய தகப்பன் மகனாகிய ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக் கொண்டு அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்”
இந்த வசனம் எபிரேய மூல பாஷையில் "seven shekels and ten (pieces) of silver” என்றே உள்ளது. அதாவது 7 சேக்கல் மற்றும் 10 வெள்ளிக்காசுகள் ஆகும். 7 என்ற எண் பரிபூரணத்தையும், 10 என்ற எண் பூமியின் முழுமையையும் உருவகமாக அடையாளப்படுத்தும் எண்கள்.
கர்த்தர் இயேசு தன்னுடைய பூரண ஜீவனைத் தந்து இவ்வுலகை மீட்டார் அல்லது விலைக்கிரயமாகக் கொண்டார் என்பதே இதின் அர்த்தம்.
1 கொரிந்தியர் 6:20
கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார்.
1 கொரிந்தியர் 7:23
நீங்கள் ஆண்டவரால் விலைகொடுத்து மீட்கப்பட்டீர்கள்.
5ம் சபை: சர்தை
(கிபி 1517 முதல் கிபி 1667 வரை)
இந்த மீட்பின் சத்தியமானது இருண்ட காலத்தில் புதையுண்டு சபைக்கு வெளிவராத இரகசியமாய் மறைக்கப்பட்டிருந்தது. இதனை 5-ம் சபையின் காலமாகிய மறுமலர்ச்சியின் காலத்தில், மார்ட்டின் லூத்தரினால் வெளிக்கொண்டு வரப்பட்டு, நம்பிக்கையூட்டும் சத்தியமாய் ஐரோப்பா எங்கும் பரவியது.
மார்ட்டின் லூத்தர் அவர்கள் போப்பு மார்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக 95 குற்றச்சாட்டுகளை விட்டன்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஒட்டிவைத்தார். போப்புமார்க்கமானது பாவமன்னிப்பை பெறுவதற்கு பாவமன்னிப்புச் சீட்டை தங்களிடம் வாங்கவேண்டும் என்ற கட்டளைக்கு எதிராக மார்ட்டின் லூத்தர் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இரட்சிப்பானது அல்லது மீட்பின் காரியமானது இயேசுகிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தினால் மாத்திரம் வரும் என்ற கிறிஸ்துவின் ஈடுபலிக்குரிய சத்தியத்தை அவர் வெளிக்கொணர்ந்தார். இந்த காரியம் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி ஒரு பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி, பலர் போப்பு மார்க்கத்தை விட்டு வெளியேறும்படி செய்தது.
இவ்வாறு போப்புமார்க்கத்திற்கு எதிராக போரிட்டு வந்தவர்கள் புரோட்டஸ்டண்ட் என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறே மறைக்கப்பட்ட அநேக சத்தியங்களானது வெளிக்கொணரும் காலமாகிய மறுமலர்ச்சி காலம் 5-ம் சபையிலிருந்து துவங்கியது.
இந்த உலகில் (நிலத்தில்), வலுவற்றவர்களாக மறைந்திருக்கும் நம்மை (புதையல்) கண்டெடுத்த நம் ஆண்டவர், நம்மை பிசாசிடம் இருந்து காத்து(புதைத்து), தம் இன்னுயிரை ஈந்து (வாங்கி) சொந்தமாக்குகிறார்.
1 கொரிந்தியர் 1:27,28
27ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.
இருண்ட காலத்தில் தொலைந்து போன சத்தியமே கிறிஸ்துவின் மீட்கும் பொருளின் சத்தியம்.
இந்த மீட்கும் பொருளின் தார்ப்பரியத்தை வேதவாக்கியங்களின்படி நாம் நன்கு புரிந்துகொண்டு, கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் உறுதிப்பட்டு கடவுளின் ஊழியத்தில் நமது பங்கை நிறைவேற்றுவோமாக.
கிறிஸ்துவுக்குள்

Comments
Post a Comment