THE PARABLE OF THE TWO SONS | இரண்டு மகன்கள் - MATTHEW 21:28-32

THE PARABLE OF THE TWO SONS

THE PARABLE OF THE TWO SONS

அன்புடையீர், வணக்கங்கள்.



இந்த பாடத்தில், நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய "இரண்டு மகன்கள்" குறித்த உவமையை 3 கோணங்களில் அறிய போகிறோம்.


வாசிக்கலாம்:

மத்தேயு 21:28-32

28. மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், “மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்“ என்றார்.

29. மேலும் அவர் மறுமொழியாக, “நான் போக விரும்பவில்லை “ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 

30. மேலும் அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, “நான் போகிறேன் ஐயா! “ என்றார்: ஆனால் போகவில்லை. 

31. மேலும் இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? “ என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே “ என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.


இங்கு, தந்தையிடம் போக விரும்பவில்லை என்று கூறிய மூத்த மகன், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றும், 

போகிறேன் என்று கூறிய இளைய மகன், தந்தையின் பேச்சை உதாசீனப்படுத்தியதாக அறிகிறோம். 


உவமையின் பின்னணி

வாசிக்கவும்:

மத்தேயு 21: 23 - 27

23,24நம் ஆண்டவர் கோவிலுக்கு சென்ற போது, அங்கு வந்த தலைமை குருக்களும், மக்களின் மூப்பர்களும் - எந்த அதிகாரத்தை கொண்டு இவைகளை செய்கிறீர், யார் அதிகாரம் கொடுத்தது என்று வினவ, 

அதற்கு நம் ஆண்டவர், அவர்களிடம் 

25. யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?  என்று அவர் கேட்டார்.

 அவர்கள்,  விண்ணகத்திலிருந்து வந்தது  என்போமானால், 

பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை  எனக் கேட்பார். 

26,27 மனிதரிடமிருந்து என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர் என்று தங்களிடையே பேசி தெரியாது என்று அவரிடம் பதிலுரைத்தனர். 


இவ்வாறு சமயோசிதமாக தெரியாது என்று பதில் உரைத்த தலைமை குருக்களிடமும், மக்களின் மூப்பரிடமும் அவர் இந்த இரண்டு மகன்கள் உவமையை கூறுகிறார். 


இந்த உவமையை மூன்று கோணங்களில் நாம் புரிந்து கொள்ள போகிறோம். 


கோணம் 1

இந்த உவமையை கூறிய பின்பு, நம் ஆண்டவர் அவர்களிடம் - 

31. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? “ என்று கேட்டார். அவர்கள் மூத்தவரே  என்று விடையளித்தனர்.


மூத்தவர்: திராட்சை தோட்டத்தில் வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறி பின்பு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேலை செய்தவர். 


அதற்கு நம் ஆண்டவர் மறுமொழியாக, 

31. வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

32. ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை: அவரை நம்பவுமில்லை “ என்றார்.


இதிலிருந்து, அவர் இந்த உவமையில் - கேள்வியை கேட்ட தலைமை குருக்களைக் = ஆசாரியரை பற்றியும், மக்களின் மூப்பர்களை பற்றி தான் சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 


முதல் மகன் - வரிதண்டுவோர் (ஆயக்காரர்) மற்றும் விலைமகளிர். 

தவறு செய்திருந்தாலும், அதை பின்பு உணர்ந்து கடவுளிடம் சேர்ந்தனர். 


இரண்டாம் மகன் - பரிசேயர், சதுசேயர், ஆசாரியர்கள், ஜனத்தின் மூப்பர்கள். 

தங்களை கடவுளிடம் பரிசுத்தவான்களாக காட்டி கொண்டு, தற்பெருமை கொண்டு, கடவுள் இட்ட கட்டளையை புறக்கணித்தனர். 


 வாசிக்கலாம்: 

லூக்கா 7:29,30

9. திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். 

30.  ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.


திராட்சை தோட்டம் - கடவுளின் திட்டம் 

மத்தேயு 20:1 

பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.


தந்தை - நம் கடவுளாம் பரமதந்தை 

யோவான் 15:1

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.


கோணம் 2

இரண்டாவது கோணத்தில், நாம் இஸ்ரயேல் மக்கள் / புறஜாதியார் அடிப்படையில் அறிய போகிறோம். 


இளைய மகன் = இரண்டாவது மகன் =இசுரயேலர்கள். 

வாசிப்போம்: 

திருத்தூதர்கள் 18: 5, 6

5. சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டருந்தார்: “இயேசுவே மெசியா என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். 

6.  அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தப்போது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, “உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று கூறினார்:

திருத்தூதர்கள், முதலாவது நற்செய்தியை யூதர்களிடம் தான் கொண்டு சென்றார். ஆனால் அவர்கள் அதை ஏற்காததால், நற்செய்தி புறஜாதியாரான நம்மிடம் வந்தது.

மேலும் வாசிப்போம்... 

ஓசியா 8:2,3

2. இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, “எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்” என்று சொல்கின்றார்கள். 

3.  இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்: பகைவன் அவர்களைத் துரத்துவான்.

இஸ்ரயேலர்கள்,  கடவுளை அறிந்திருந்தாலும், அவர்கள் உண்மையை ஏற்று கொள்ளவில்லை.



முதல் மகன் = மூத்தவன் = புறஜாதியார்

வாசிப்போம் 

திருத்தூதர்கள் 13:45, 46

45. மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.

46. பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம்.


எவ்வாறு புறஜாதியாருக்கு முதலில் அழைப்பு சென்றது? 

வாசிப்போம்.. 

கலாத்தியர் 3: 16

வாக்குறுதிகள் ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன. பலரைக் குறிக்கும் முறையில் “வழி மரபினர்களுக்கு” என்று இல்லாமல் ஒருவரையே குறிக்கும் முறையில் “உன் மரபினருக்கு” என்று உள்ளது. அந்த மரபினர் கிறிஸ்துவே.

ஆபிரகாம் புறஜாதியாராக இருக்கும் போது தான் அழைப்பை பெற்றார். 


மேலும், 

புறஜாதியாரான நினிவே மக்கள், மனம் திருந்தி சாக்கு உடை உடுத்தி கடவுளிடம் மன்றாடிய போது, கடவுள் தனது மனதை மாற்றி கொண்டு, அனுப்புவதாக கூறிய தண்டனையை அனுப்பவில்லை. 

யோனா 3: 8-10

8. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்: தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். 

9. இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்: அவரது கடுஞ்சினமும் தணியும்: நமக்கு அழிவு வராது.” 

10. கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

நினிவே மக்கள் = புறஜாதியார். 


கோணம் 3

கடவுள் நமக்கு திருச்சபையாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 


நாம் :  மூத்தவனா? இளையவனா? 


வாசிப்போம்: 

ரோமர் 2: 17- 23

17. யூதர் (திருச்சபை) என்னும் பெயரைத் தாங்கித் திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்: 

18. அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்: திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள். 

19.  அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம் உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில் பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும், 

20.  இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள். 

21. ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்: நீங்களே திருடுவதில்லையா? 

22.  விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்: நீங்களே விபசாரம் செய்வதில்லையா? தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்: நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா? 

23. திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்: நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?


இது யூதர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் சொல்லப்பட்டுள்ளது. 


வாசிப்போம்.. 

1 கொரிந்தியர் 9: 26,27

26. நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன். 

27. பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.


நாம் மூத்த மகனா ? இல்லை இளைய மகனா என்று நம்மை நாமே நிதானித்து அறிவோம். 
நம் கடவுளாம் பரமதந்தையும், திருமகனார் இயேசு கிறிஸ்துவும் நம்மை வழி நடத்துவார்ககளாக. ஆமென். 


Comments