THE MARRIAGE OF ISAAC AND REBEKAH | ஈசாக்கு ~ ரெபேக்காவின் கல்யாணம் - GENESIS Ch. 24

THE MARRIAGE OF ISAAC AND REBEKAH

THE MARRIAGE OF ISAAC AND REBEKAH

1. திரு ஆபிரகாம் அவர்கள் வீட்டு கல்யாணத்தில் கடவுளின் திட்டம்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
  • இந்த பாடத்தில் கானான் நாட்டில் இருந்த ஆபிரஹாம் அவர்கள் தன் மகன் ஈசாக்கிற்கு மனைவியை தேர்ந்தெடுக்க, தனது வீட்டின் மூத்த உதவியாளரை, அவரது சொந்த ஊரான மெசபொத்தாமியாவிற்கு அனுப்பியதை பற்றியும்,

  • அந்த உதவியாளர், ஆபிரகாமின் சகோதரர் நாகோரையும் அவரது மகள் ரெபேக்காவை சந்தித்த நிகழ்வுகளை பற்றியும்,

  • பின் ரெபேக்கா வனாந்தரத்தில் பயணப்பட்டு ஈசாக்கின் இடத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டதை பற்றியும்

  • இந்த சம்பவங்களில் மறைந்துள்ள கடவுளின் திட்டத்தையும் அறிய போகிறோம்.

முதலில், இந்த ஆதியாகமம் 24 ஆம் அதிகாரத்தை முழுவதுமாக வாசித்து நினைவில் கொள்வோமா?


2. மருமகள் தேடும் அப்பா
நாம் அறிந்த படி, ஆபிரகாமுக்கு அவரது 100 ஆவது வயதில், (1850BC) ஈசாக்கு பிறந்தார்.
அதன் பின், அவரது துணைவியார் சாரா அவர்கள், தனது 127 ஆவது வயதில் (1813BC) மரணமடைந்தார்.
அதன் பின், மூன்று வருடங்களுக்கு பிறகு, (1810BC) ஈசாக்கு 40 வயதான போது, (ஆதியாகமம் 25: 20)
அவரது மூத்த உதவியாளரை அழைத்து தனது மகனின் திருமண காரியத்தை குறித்து பேசினார்.
▪️ எலியேசர்
ஆதியாகமம் 24 ஆம் அதிகாரத்தில் அந்த உதவியாளரின் பெயர் கொடுக்கப்படவில்லை.
ஆனால்,
ஆதியாகமம் 15: 2
ஆபிராம்: “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர் தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
இந்த வசனம் மூலம், ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய மூத்த உதவியாளர் எலியேசர் தான் என்று புரிந்து கொள்கிறோம்.
▪️ தொடையின் கீழ் கை
வாசிப்போம்
ஆதியாகமம் 24: 2 ஒருநாள் ஆபிரகாம் தம் வீட்டின் உதவியாளர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஆணையிடு
பைபிளில், தொடை என்பது வழிமரபு/ சந்ததி மற்றும் வாக்குதத்ததின் வழி என்று பொருள் படும்.

தொடையின் கீழ் கையை வைத்தல் என்பது, வாக்குத்தத்தச் சந்ததியை முன்வைத்து எடுத்த உடன்படிக்கையின் உறுதியை குறிக்கிறது. (ஆதியாகமம் 46: 25, 47: 29)
▪️ நோவாவின் மகன் சேமின் உறவினர்கள்
ஆதியாகமம் 24: 3,4
ஆபிரகாம் தனது மகனுக்கு கானான் நாட்டில் பெண் கொள்ள வேண்டாம் என்றும் அவரது சொந்த நாடான மெசபொத்தாமியாவுக்கு சென்று அவரது உறவினர்களில் பெண்ணை தேர்ந்தெடுக்க சொல்கிறார்.
ஏன் ஆபிரகாம் கானானில் பெண் கொள்ள வேண்டாம் என்று கூறினார்?
கானான் நாட்டில் உள்ளவர்கள் உண்மையான கடவுளை அறியாதவர்கள். அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், மேலுள்ள கால வரை படத்தை ZOOM செய்து ஆராய்ந்து பார்க்கும் போது,நோவாவின் மகனான சேம், ஆபிரகாமின் காலப்பகுதியில் அவருடன் வாழ்ந்தவர் ஆவார் என்பதை அறிகிறோம்.

அதனால், சேம் மூலமாக, தன்னை போலவே, உண்மையான கடவுளை அறிந்தவர்கள் அவரது உறவினர்களில் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதை ஆபிரகாம் அறிந்திருப்பார்.

அதனால் தான், ஆபிரகாம், எலியேசரை அவரது உறவினர்களில் பெண்ணை தேர்ந்தெடுக்க சொன்னார்.
▪️ சொந்த நாட்டுக்கு கூட்டி செல்ல கூடாது
ஆதியாகமம் 24: 5-9
மேலும் எந்த காரணத்தை கொண்டும், மணப்பெண் கானானுக்கு வரவில்லை என்றால், ஈசாக்கை மெசபொத்தாமியாவிற்கு கூட்டி கொண்டு செல்ல கூடாது என்ற கண்டிப்பாக கூறி,
அவரை அந்நாட்டில் இருந்து "இந்த நாட்டை உன் வழி மரபினருக்கு தருவேன்" என்று ஆணையிட்டு கானானுக்கு அழைத்து வந்த கடவுள், அவருக்கு முன்பாக தம் தூதரை அனுப்பி காரியத்தை கண்டிப்பாக வாய்க்கப் பண்ணுவார் என்று உறுதியாக கூறி அனுப்பினார்.
3. கிணற்றருகே வந்த கன்னி
எலியேசர் சென்ற பாதை

▪️ பத்து ஓட்டகங்களில் சிறந்த பொருட்களோடு 950KM பயணம்
ஆதியாகமம் 24: 10
நம்பிக்கைக்குரிய மூத்த உதவியாளரான எலியேசர், 10 ஒட்டகங்களில், எஜமானரின் பொருட்களில் சிறந்தவற்றை எடுத்து கொண்டு, மெசபொத்தாமியாவில் உள்ள ஆபிரகாமின் சகோதரர் நாகோரின் ஊருக்கு பயணித்தார்.
▪️ எலியேசரின் ஜெபம்
ஆதியாகமம் 24: 11- பல மைல் தூரம் பாலைவனத்தில் நடந்து நகர்புறத்தை அடைந்ததும், களைப்பில் ஓட்டகங்கள் தண்ணீர் கேட்டன.
அதனால், ஒட்டகங்களை அருகில் இருந்த கிணறு அருகே மண்டியிட செய்தார்.
அப்போது, எலியேசர் கடவுளிடம் ஒரு சின்ன ஜெபத்தை ஏறேடுத்தார்.
வாசிப்போம்...
ஆதியாகமம் 24: 12-14
12எலியேசர்: என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும்.என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
13 இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன்.நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.
14 அப்பொழுது நான்”தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு” என்று கேட்க,”குடியுங்கள்: மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்” என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக! நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் நானும் அறிந்து கொள்வேன்” ஆமெ.
இவ்வாறு நாம் ஒரு ஜெபம் செய்தால், அது வேடிக்கையானதாக இருக்கும். அவர் ஜெபிப்தது போல நடப்பதற்கும் சாத்தியம் குறைவு தான். ஆனால், என்ன நடந்தது! 🙂
▪️ கிணற்றருகே வந்த ரெபக்கா
ஆதியாகமம் 24: 15-21
ஜெபத்தை ஆமென் சொல்லி முடிப்பதற்குள், ஆபிரகாமின் சகோதரர் நாகோர் - மில்காவின் மகன் பெத்துவேலின் எழில் மிகு தோற்றம் உடைய திருவளர் செல்வி ரெபேக்கா அங்கு வந்து, கிணற்றில் இறங்கி நீரை எடுத்து கொண்டு மேலே வந்தார்.
அப்போது, எலியேசர் அவரிடம் ஓடிச் சென்று தண்ணீர் கேட்க,

எலியேசர்: எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?

ரெபேக்கா: குடியுங்கள் ஐயா
அவர் குடித்து முடித்ததும்,
“உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்”
என்று சொல்லி, ஓடிச்சென்று ஒட்டகங்கள் அனைத்துக்கும் கிணற்றில் இறங்கி தண்ணீர் இறைத்து தொட்டியில் ஊற்றினார்.
இதை கண்ட எலியேசர், வாயடைத்து போனார். ஏனென்றால்,
பாலைவனப் பயணத்திற்குப் பின் ஒரு ஒட்டகம் ஒரே முறையில் சுமார் 80–100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
10 ஒட்டகங்களுக்கு, ரெபேக்கா கிணற்றிலிருந்து சுமார் 800–1000 லிட்டர் தண்ணீரை, கேட்காமலே, தன்னார்வமாக, சோர்வடையாமல், மனஉறுதியுடன் அதுவும் யார் என்றே தெரியாத ஒரு நபருக்கு செய்தார்.
மேலும், ஒரு குடம் 20 லிட்டர் என்று எடுத்துக் கொண்டால் கூட, அவர் 1000/20 = 50 முறைக்கு மேல் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல், கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுத்து தொட்டியில் ஊற்றியுள்ளார்.
அந்தளவு உதவி செய்வதற்கும் அவர் தன்னை பலப்படுத்தி தயாராக வைத்திருந்தார் என்பதை இங்கு நாம் கவனிக்கிறோம்.
▪️ பொன் மூக்கணியும் இரண்டு காப்புகளும்
ஆதியாகமம் 24: 21-22
யாரென்றே தெரியாத பெண்ணிடம் தண்ணீர் கேட்க, தானாகவே அவரது ஒட்டகங்களுக்கும் இவ்வளவு தண்ணீர் இறைத்து கொடுத்ததை பார்த்த கொண்டிருந்த எலியேசர்,

தான் செய்த ஜெபம் உடனடியாக கேட்கப்பட்டதோ இல்லையா என்று ஆச்சரியப்பட்டார்.
பின், ஒட்டகங்களுக்கு தண்ணீர் கொடுத்த பின்பு, எலியேசர் தான் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த பொருட்களில்,
அரை சேக்கல் (6 கிராம்) எடையுள்ள ஒரு பொன் மூக்கணியும், பத்து சேக்கல் (120 கிராம்) எடையுள்ள கையில் அணியக்கூடிய இரண்டு காப்புகளும் கொடுத்தார்.
4. நாகோரின் வீட்டுக்கு சென்ற எலியேசர்
ஆதியாகமம் 24: 23-60
அதன் பின், எலியேசர் அந்த பெண் தன்னுடைய எஜமான் ஆபிரகாமின் சகோதரர் நாகோரின் பேத்தி என்று அறிந்து கொண்டு, அவரது வீட்டில் தங்க அனுமதி கேட்கிறார்.
ரெபேக்கா நடந்தவற்றையும், வந்த மனிதர் தந்த பொன் ஆபரணங்களை தன் வீட்டில் உள்ளவர்களிடம் காட்ட, ரெபேக்காவின் சகோதரன் லாபான் ஓடிச்சென்று எலியேசரிடம்
"ஆண்டாவரால் ஆசீர் பெற்றவரே வருக" என்று அன்புடன் தன் வீட்டுக்கு அவரையும் அவர் உடன் வந்தவர்களையும், ஒட்டகங்களையும் அழைத்து சென்று உணவு பரிமாறினான்.
ஆனால், உணவை உணவை உண்பதற்கு முன்,
தான் யார் என்பதையும்,
ஆண்டவர் அவரது எஜமான் ஆபிரகாமை அதிகமாக ஆசிர்வதித்ததையும்,
அங்கு வந்த ஈசாக்கின் திருமண காரியத்தையும்,
ஆபிரகாமிடம் ஆணையிட்டு செய்த உறுதிமொழியையும்,
தான் செய்த ஜெபத்தையும்,
ரெபேக்கா செய்த நன்மையையும் கூறி,
ஆண்டவர் உடனடியாக ஜெபத்தை கேட்டு,
ஆதியாகமம் 24: 48
மேலும் நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன்.ஏனெனில் என் தலைவரின் சகோதரியின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.
என்று ஆச்சர்யத்துடன் கூறினார்.
ஆதியாகமம் 24: 50,51
50 அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, “இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது.நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது. 51 இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்” என்றார்.
ஆதியாகமம் 24: 50,51
57 அதன் பின், ரெபேக்காவிடம் அவரது விருப்பத்தை கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்” என்றனர். 58 அப்படியே ரெபேக்காவை அழைத்து,”இவரோடு போகிறாயா?” என்று அவரைக் கேட்டனர்.அவரும் ”போகிறேன்” என்றார்.
அதன் பின், சில நாட்கள் அங்கு தங்கி இருந்து, பின் ரெபேக்காவை ஆசீர்வதித்து அவளது தோழிகளோடு அனுப்பி வைத்தனர். வாசிப்போம்
ஆதியாகமம் 24: 50,51
அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி, “எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய்.உன் வழி மரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!” என்றனர்.
🙂
5. தோழிகளுடன் மணவாளனை அடைதல்

ஆதியாகமம் 24: 61-67
ரெபேக்கா தனது தோழிகளுடன் ஒட்டக சவாரி செய்து, எலியேசரை பின் தொடர்ந்து சென்றார்.
மேலே MAPS இல், அவர்கள் பயணம் செய்த வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட, 950KM தூர பயணத்தை, முன்பு அறிமுகம் இல்லாத புதிய நபர்களோடு, அது வரை நேரில் பார்த்திடாத ஈசாக்கை சந்திக்க, கண்களில் மகிழ்ச்சியுடனும், எதிர்கால நம்பிக்கையுடனும் கானானை நோக்கி பயணம் செய்தார்.
▪️ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

ஒரு மாலை இளவெயில் நேரத்தில், ஈசாக்கு கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.

ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார்.உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.

வருவது ஈசாக்கு தான் என்று அறிந்து கொண்ட ரெபேக்கா, உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.

பின்,
ஆதியாகமம் 24: 67
ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச்சென்று மணந்துகொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார்.
இந்த திருமணம் நடந்த போது, ஈசாக்கின் வயது 40. (ஆதியாகமம் 25: 20) ஆண்டு: 1810BC
6. நிழலும் பொருளும்
இதுவரை நாம் பார்த்த இந்த அழகான சம்பவம் மூலமாக நமக்கு கடவுள் தரும் பாடம் என்ன?
நாம் பைபிளை படிப்பதற்கு முன்பு அறிந்து கொண்ட 6 வழிமுறைகளில், இந்த சம்பவத்தை நிழலும் பொருளும் அடிப்படையில் அறிந்து கொள்ள போகிறோம். வாசிப்போம்
1 கொரிந்தியர் 10: 11
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை எச்சரிக்கையாக எழுதப்பட்டுள்ளன.

ரோமர் 15: 4
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் ஆறுதலும் ஊக்கத்தினாலும் நாம் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது.
ஆம். அவர்களுக்கு சம்பவத்தை இந்த நிகழ்வில் இருந்து, நமக்கு எச்சரிக்கையும் இருக்கிறது, அறிவுரையும் இருக்கிறது, ஆறுதல் இருக்கிறது. நம்பிக்கையூட்டும் ஊக்கமும் இருக்கிறது. 🙂
இப்போது, இந்த சம்பவத்தில் உள்ள நபர்கள் யாரை அடையாளப்படுத்துகிறார்கள் என்று அறிய போகிறோம். அப்போது, இதன் பொருள் நமக்கு புரியும்.
நாம் அறிந்து கொள்ள வேண்டியது, 1. ஆபிரகாம்
2. நம்பிக்கைக்குரிய மூத்த உதவியாளர் - எலியேசர்
3. மணமகன் ஈசாக்கு
4. மணமகள் ரெபேக்கா

5. ஒட்டகம்
6. 10 ஒட்டகங்கள்
7. ஆபிரகாமும் ஈசாக்கும்
ஈசாக்கு
தந்தை ஆபிரகாமுக்கு வாக்குதத்தத்தின் படி பிறந்த ஒரே மகன் - ஈசாக்கு.

அதுபோல,
நம் பரம தந்தையாம் கடவுளின் ஒரே திருமகனார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
ஆபிரகாம், தம் மகன் ஈசாக்கை பலி கொடுக்க ஒப்புக் கொடுத்தது, பாவனையாக திரும்ப பெற்று கொண்டார்.
வாசிப்போம்
எபிரேயர் 11: 19
மரித்தோரிலிருந்து எழுப்ப கடவுள் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
ஆபிரகாம் தனது ஒரே மகனை பலியாக ஒப்புக்கொடுத்தார்;
மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டார்.
அதுபோல,
நம் கடவுளாம் பரமதந்தையும், தம் ஒரே திருமகனை சிலுவை மரணத்திற்கு ஒப்பு கொடுத்து, பின்பு உயிர்த்தெழ செய்தார்.
இதன் மூலம்,
ஈசாக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறார் என்று அறிந்து கொள்கிறோம்.
அப்படி என்றால், ஆபிரகாம் அவர்கள், யாரை அடையாளப் படுத்துகிறார்?
ஆம். நம் கடவுளாம் பரமதந்தையை அடையாளப் படுத்துகிறார்.
8. மணமகள் ரெபேக்கா
வாசிப்போம்
2 கொரிந்தியர் 11: 2
கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
மாற்கு 2: 19
கிறிஸ்து =மணமகன்
இவ்வசனம், கிறிஸ்துவை மணமகனுக்கு ஒப்பிட்டும்,
திருச்சபையாக அழைக்கப்பட்டிருக்கும் நம்மை கற்புள்ள கன்னி = மணமகளாகவும் ஒப்பிட்டு கூறுகிறது.
வாசிப்போம்
எபேசியர் 5: 25, 32
கணவர்கள், கிறிஸ்து சபையை அன்புகொண்டு தம்மையே அவளுக்காக ஒப்புக்கொடுத்ததுபோல, உங்கள் மனைவிகளை அன்புகொள்ளுங்கள்…

இந்த இரகசியம் மிகப்பெரியது; ஆனால் நான் கிறிஸ்துவையும் சபையையும் குறித்தே சொல்கிறேன்.
அப்படி என்றால்,
ரெபேக்கா - பரலோக வாய்ப்பு பெரும் திருச்சபைக்கு அடையாளமாக இருக்கிறார்.
அதாவது நமக்கு. 🙂
9. ரெபேக்காவை ஈசாக்குடன் சேர்க்கும் நம்பிக்கைக்குரிய மூத்த உதவியாளர் = எலியேசர்
எலியேசர் யாரை அடையாளப்படுத்துகிறார்?

  • அவர் ஆபிரகாமின் வீட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மூத்த உதவியாளர்.
  • மேலும், ஆபிரகாம் சார்பாக அவரது மகனுக்கு பயணம் மேற்கொண்டவர்.
  • மணமகளை தேர்ந்தெடுத்து, அவளுக்கு விலையுயர்ந்த பொன் ஆபரணங்களை தந்ததும் இவர் தான்.
  • மணமகள் ரெபேக்காவுக்கு தூரத்தில் இருந்து வந்தவர் தான் மணமகன் ஈசாக்கு என்று அடையாளம் காட்டுவதும் இந்த உதவியாளர் தான்
  • மணமகளை மணமகனுடன் சேர்ப்பதும் இந்த உதவியாளர் தான்.
  • மணமகள் ரெபேக்காவை பாலை நில பயணத்தில் தைரியப்படுத்தி பத்திரமாக வழி நடத்தி வந்தவரும் இந்த உதவியாளர் தான்.
அப்படி என்றால்,
கிறிஸ்துவின் மணமகளாக அழைக்கப் பட்டிருக்கும் நமக்கு,
நம்மை தேர்ந்தெடுத்து,
இந்த உலகமாகிய வனாந்திர பயணத்தில் வழி நடத்தி,
நமக்கு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி கற்று தந்து,
மணமகனை அடையும் வரை வழி நடத்துவது யார் / எது?

ஆம். கடவுள் தரும் தூய (பரிசுத்த) ஆவி = தூய வல்லமை = HOLY SPIRIT = SACRED POWER
வாசிப்போம்
யோவான் 16: 13,14
13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
இங்கு கடவுளின் தூய வல்லமை, உதவியாளராக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 24 ஆம் அதிகாரத்தில், எங்குமே எலியேசர் பெயர் தரப்படவில்லை.
வேலைக்காரன் = SERVANT என்கிற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
(இந்த பாடத்தில், நாம் உதவியாளர் என்ற பொருத்தமான வார்த்தையை பயன்படுத்துகிறோம்.)
10. தாகமாக இருந்த பத்து ஒட்டகங்கள்

எப்படி, இப்போது கடவுள் உலகத்தில் செய்யும் ஒரே வேலை, அவரது மகன் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்ற மனைவி = மணவாட்டி தேடுவது தான்.
அதை எப்படி ஆபிரஹாம் அவர்கள், கானான் நாட்டில் தேடாமல், சிலைகள் மலிந்திருக்கும் மெசபொத்தாமியாவில் தன் உதவியாளர் மூலமாக தேடினாரோ,

அதே போல, நம் கடவுளும் பரலோகத்தில் இல்லாமல், தம் தூய சக்தி (சத்தியங்கள்) மூலமாக சிலைகளை வணங்கும் இந்த உலகத்தில் மணமகள் தேடுகிறார்.
ஒட்டகம் எதை குறிக்கும்?
பைபிளில், கழுதை, குதிரை, ஒட்டகம் ஆகிய விலங்குகள் சத்தியத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

ஒருவகையில், சத்தியத்தை சுமந்து செல்லும் கருவிகளுக்கும் அடையாளமாக உள்ளது.
அதாவது, எவ்வாறு ஒட்டகங்கள், அமைதியாக எலியேசர் பேச்சை கேட்டு, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சிறந்த பொருட்களை ஏற்றி சென்று கொண்டு சேர்க்க பயன்பட்டதோ

அதே போல, சத்தியத்தை அறிவிக்க கடவுள் பயன்படுத்தும் கழுதைகளான நாமும், கடவுளின் வல்லைமைக்கு கீழ்பட்டு, வழிநடத்தப்பட்டு, அமைதியாக விலையேர பெற்ற சத்தியத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவிகளாக இருக்க வேண்டும்.
மேலும், ஒட்டகம் தண்ணீரை அதிகளவு சேமிக்க கூடிய விலங்கு.
தண்ணீர் = ஜீவ தண்ணீர் = கடவுளின் சத்தியங்களை அடையாளப்படுத்தும்.
நாமும், ஒட்டகம் போல எவ்வளவு முடியுமோ சத்தியங்களை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அதாவது, இங்கு சிறந்த பொருட்கள் ஏற்றப்பட்ட ஒட்டகம் சத்தியத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
கழுதை யிடமிருந்து,
சத்தியத்தை பகிரும்போது தாழ்மையுடன் இருக்க கற்றுக்கொள்கிறோம்.
குதிரை யிடமிருந்து,
சத்தியத்தை பகிரும்போது வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட கற்றுக்கொள்கிறோம்.
ஒட்டகம் யிடமிருந்து,
இந்த நீண்ட பயணத்தில் வலி, சிரமம், தாமதம் ஆகியவற்றை சகிப்பதையும், மேலும் அதிக அளவு “தண்ணீர்” (சத்தியம்) நம்முள் சேமித்து வைத்துக்கொள்வதையும் கற்றுக்கொள்கிறோம்.

10 எதை குறிக்கும்?
பைபிளில், 10 என்கிற எண் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 10 கட்டளைகள் (Exodus 20:1-17)
  • 10 வாதைகள் (Exodus 7-12)
  • தசமபாகம் (1/10)
  • 10 வெள்ளி காசு உவமை
  • 10 நரம்பு வீணை (Psalms 33:2, 144:9
  • 10 கன்னிகைகள் (Mathew 25: 1-13)
  • 10 கால் விரல்கள் (நேபுகாத்நெக்சாரின் சிலை) = 10 உலக ராஜ்ஜியங்களை குறிக்கும் (Daniel 2:41,42)
  • 10 கொம்புகள் (Daniel 7: 7,24 | Revelation 13:1, 17:12)
ஆக, 10 என்பது உலகத்துக்கு உரிய எண்ணாக இருக்கிறது.

ஒட்டகத்தின் மேல் விலையுயர்ந்த பொருள்கள் இருந்தது
அது எலியேசர் மூலம் ரெபேக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்டது.
வாசிப்போம்
1 யோவான் 2: 27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது,
எவ்வாறு எலியேசர் விலையுயர்ந்த ஆபரணங்களை ரெபேக்கா வுக்கு தந்தாரோ, அதே போல, கடவுளின் தூய வல்லமை, நமக்கு விலையேரபெற்ற சத்தியத்தினால் நம்மை போஷிக்கிறது.
தாகமாக இருந்த 10 ஒட்டகங்கள் என்பது இந்த உலகத்துக்கு தேவையான சத்தியங்களை சுமந்து செல்லும் கருவியாக செயல் படுவோரை குறிக்கும். 🙂
11. ரெபேக்கா 10 ஓட்டங்களுக்கு தரும் தண்ணீர்
நாம் முந்தைய பகுதியில் 10 என்பது உலகத்துக்கு உரிய எண்ணாகவும், ஒட்டகம் என்பது சத்தியத்தை கொண்டு செல்லும் கருவிகள் என்று அறிந்து கொண்டோம்.
அதாவது, ரெபேக்கா 10 ஒட்டகங்களுக்கு தண்ணீர் தந்தது,
பூமியில் உள்ள சத்திய தாகத்தை ஆற்ற வேண்டியது, ரெபேக்கா மூலமாக செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது.
அதாவது, திருச்சபையாக மாற அழைக்கப்படும் கிறிஸ்துவின் மணவாட்டிகள் மூலமாக.
யோவான் 4: 7-14
நம் ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்த போது அவர் தாகமாக இருந்த போது, சமாரியா பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.
அது நாவின் தாகமாக இருந்தாலும், அதன் பின், அவர் அதை ஜீவ தண்ணீருக்கு = சத்தியத்திற்கு ஒப்பிட்டு கூறினார் என்று வாசிக்கிறோம் அல்லவா.
நாம் ரெபேக்கா போல மணமகளாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ரெபேக்கா செய்ததை தான் நாமும் செய்ய வேண்டும். 🙂 எப்படி எலியேசர் அருகில் வந்து கேட்டவுடன்
ரெபேக்கா எப்படி தன் முழு மனதுடன், முழு பெலத்துடன், தாகமாக இருந்த 10 ஒட்டகங்களுக்கு (உலகத்திற்கு), தண்ணீரை நிறைவுடன் தந்தாரோ,

அது போல, கடவுளின் வல்லமை நம்மிடம் அருகில் வர விட வேண்டும்.
கடவுளின் வல்லமை நம்மிடம் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.
கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை புரிந்து 10 ஒட்டகங்களுக்கு (உலகத்திற்கு), தண்ணீர் (சத்தியம்) தர தயாராக இருக்க வேண்டும்.
அதனால், நாம் எப்போதும் குடத்துடன் தண்ணீர் அருகே இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
அதாவது, சத்தியம் கிடைக்கும் இடத்தில் திறந்த மனதுடன் (சத்தியம் அறிவிப்பதற்கு) தயாராக இருக்க வேண்டும்.
அப்படி நாம் செய்தால், எப்படி எலியேசர் ரெபேக்காவை பொன் ஆபரணங்கள் தந்து தேர்ந்தெடுத்து கானான் நாட்டில் இருக்கும் ஈசாக்கிடம் வழிநடத்தினாரோ,

அதுபோல, கடவுளின் தூய வல்லமை, நம்முடைய தன்னலம் அற்ற செயலை பார்த்து, நமக்கு பொன் ஆபரணங்கள் தந்து (விலையேர பெற்ற சத்தியங்கள்) நம்மை தகுதி படுத்தி, நம்மை பரலோகத்தில் (கானான்) இருக்கும் கிறிஸ்துவிடம் நாம் சேர இந்த உலகமாகிய வனாந்திர பயணத்தில் நம்மை வழிநடத்தும்.
எபேசியர் 6: 14,15
அதனால், சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக் கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும்,
15  சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள்.

ரெபேக்கா போல ஒட்டகங்களுக்கு தண்ணீர் தர இன்றில் இருந்து நாம் ஆயத்தமாவோம். வாழ்த்துக்கள். 🙂
12. ஏன் கிறிஸ்து - திருச்சபை, கணவன் மனைவிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
வாசிப்போம்
2 கொரிந்தியர் 11: 2
கிறிஸ்து என்ற ஒரே மணமகனுக்கு நான் உங்களை நிச்சயம் செய்துகொடுத்தேன். அதனால் உங்களைக் கற்புள்ள* கன்னிப்பெண்ணாக அவர் முன்னால் நிறுத்த விரும்புகிறேன்.
கடவுள், உலகில் ஏற்படுத்த முதல் உறவே கணவன் - மனைவி உறவு தான்.
ஒரு கணவனும் மனைவியும் இணைந்து ஒரே சிந்தையுடன் தங்கள் குடும்பத்தை கட்டுவது போல,
கிறிஸ்துவின் தலைமையில் மணவாட்டி இணைந்து ஒரே சிந்தையுடன் திருச்சபையை கட்ட வேண்டும்.
வாசிப்போம்
ஏசாயா 4: 1 அப்போது, ஏழு பெண்கள் ஓர் ஆளைப் பிடித்துக்கொண்டு, “தயவுசெய்து எங்கள் மானத்தைக் காப்பாற்றுங்கள். எங்களைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் சாப்பாடும் போட வேண்டாம், துணிமணியும் தர வேண்டாம். அதையெல்லாம் நாங்களே பார்த்துக்கொள்வோம்” என்று சொல்வார்கள்.
பைபிளில் ஏழு என்பது முழுமையை (அனைத்தையும்) குறிக்கும்.
இங்கு பெண்கள் என்பது சபையை குறிக்கும்.
ஆக, இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால்,
இன்றைய காலத்தில், உலகில் உள்ள எல்லா கிறிஸ்த்தவ சபைகளும்,
கிறிஸ்துவை மணவாளனாக பெயரளவில் ஏற்று கொண்டாலும்,
ஆனால், ஒவ்வொருவரும் சொந்த போதைனைகளையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதை தீர்க்கதரிசனமாக குறிக்கிறது.
ஆனால், கிறிஸ்து எதிர்பார்க்கும் மணமகள், உலகத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு, கடவுளின் சக்தியால் சத்தியத்தில் வழிநடத்தப்பட வேண்டும்.
அதனால் தான், ஏவாள் ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவாக்கப்பட்டார் என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 2: 23
அப்போது அந்த மனிதன், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு! என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள். ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”
அப்படி என்றால், ஏவாள் எலும்பில் இருந்து தான் உருவாக வேண்டும்.
எலும்பு என்பது விசுவாசத்தை அடையாளப்படுத்தும்.
அதுபோல, ரெபேக்காவும் ஈசாக்கை பார்க்காமலேயே விசுவாசத்தின் அடிப்படையில் தான் எலியேசருடன் சென்றார்.
நாமும், நமது விசுவாசத்தின் அடிப்படையில் தான் கிறிஸ்துவோடு சேர்க்கப்படுவோம்.
அல்லேலூயா 🙂
13. மூக்கணி, 2 காப்புகள், வெள்ளி, தங்கம், ஆடைகள்
ரெபேக்கா தனது நற்குணத்தை காட்டியதும், எலியேசர் முதலில் மூக்கில் அணியும் தங்க மூக்கணியும், அடுத்து இரண்டு காப்புகளும் தந்தார் என்று வாசிக்கிறோம்.
மூக்கணி
மூக்குத்தி என்பது மறைக்கப்படாத, வெளிப்படையான அலங்காரம்.
இதன் பொருள்:
கடவுளின் அழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதன் வெளிப்படையான அடையாளம்.
கீழ்ப்படிதலையும் அர்பணிப்பையும் குறிக்கிறது.
காப்பு
காப்பு கைகளில் அனைவது.
அது நாம் கடவுளுக்கு செய்யும் உகந்த செயல்களுக்கு அடையாளமாக உள்ளது.
பின் வீட்டுக்கு சென்ற பின், எலியேசர் மீண்டும் ரெபேக்காவுக்கு வெள்ளியும் பொன்னும் தந்தார். அது எதை குறிக்கிறது?

வெள்ளி
வெள்ளி என்பது இறைவார்த்தைகளின் சத்தியத்தை அடையாளப் படுத்துகிறது.
சங்கீதம் 12: 6
கடவுளின் வார்த்தைகள் சுத்தமானவை. அவை களிமண் சூளையில் ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன.

தங்கம்
தங்கம் என்பது தெய்வீக தன்மையை அடையாளப் படுத்துகிறது.
அதாவது, தங்கம் எப்படி என்றும் மாறாமல் நிலைதன்மையுடன் இருக்கிறதோ,
அதுபோல, நாம் கிறிஸ்துவோடு சேர முடிவெடுத்தால், கடவுளின் தெய்வீக குணங்கள் நம்மை அதிகதிகமாக அலங்கரிக்கும்
2 பேதுரு 1: 4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆடைகள்
வாசிப்போம்
ஏசாயா 61: 10
நான் ஆண்டவரை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவேன். என் கடவுளை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போவேன். ஏனென்றால், மீட்பின் உடையை அவர் எனக்குத் தந்திருக்கிறார்.+ நீதியின் சால்வையை எனக்குப் போர்த்தியிருக்கிறார். தலைப்பாகை அணியும்* மணமகனைப் போலவும், நகைகள் அணியும் மணமகளைப் போலவும் அவர் என்னை அலங்கரித்திருக்கிறார்.

மீட்பின் உடை என்றால் என்ன?
இங்கு ஆடை என்பது நமக்கு உயிர் = மீட்பு தரக்கூடியது.
அதாவது, கடலில் பயணிக்கும் போது பயன்படுத்தும் LIFE SAVING JACKET போல.

ஆடை = கடவுள் தரும் மீட்பு

நமக்கு மீட்பை தருவதும் மீட்பை பாதுகாப்பதும் யார்?
ஆம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. வாசிப்போம்
அப்போஸ்தலரின் செயல்கள் 4: 12
அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை;
ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்”.
கலாத்தியர் 3: 27
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் எல்லாரும் கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள்.

நீதியின் சால்வை என்றால் என்ன?
வாசிப்போம்
ரோமர் 4: 9, 21,22,23
9 விசுவாசத்தால் ஆபிரகாம் நீதிமானாகக் கருதப்பட்டார்.
21 அதோடு, கடவுளால் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்பதை முழுமையாக நம்பினார்.
22  அதனால், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”
23  ஆனாலும், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வார்த்தைகள் அவருக்காக மட்டும் எழுதப்படவில்லை,
24  நமக்காகவும் எழுதப்பட்டன. நம் எஜமானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பிய கடவுள்மேல் நாம் விசுவாசம் வைப்பதால், நாமும் நீதிமான்களாகக் கருதப்படுவோம்.

14. ஒட்டகத்தில் வனாந்திர பயணம்
காரியம் வாய்த்தவுடன், எலியேசர் உடனடியாக அடுத்த நாளே ரெபேக்காவுடன் கிளம்பினார்.

லாபானும் அவரது தாயும் 10 நாட்கள் இருந்து விட்டு போகலாமே என்று கூறியதை எலியேசர் திட்டமாக மறுத்தார்.
ஆதியாகமம் 24: 56
ஆனால் அவர், “நான் வந்த காரியத்தை கடவுள் நல்லபடியாக முடித்துக் கொடுத்திருக்கிறார், அதனால் நேரம் தாழ்த்தாமல் என்னை அனுப்பி வையுங்கள். நான் என் எஜமானிடம் போக வேண்டும்” என்றார்.
நாமும், கிறிஸ்துவோடு சேரும் வாய்ப்பு வரும்போது, உடனடியாக செவி சாய்த்து பழையவைகளை மறந்து கடவுளின் தூய வல்லமை வழிநடத்தும் பயணத்தை ஏற்று கொள்ள வேண்டும்.
இன்றைய கிறிஸ்தவர்கள் சிலர், நான் இயேசுவை பார்த்தேன் என்று கூறுகின்றனர்.
அது சாத்தியமா? 🙂

ரெபேக்கா பிரயாணம் முடியும் வரை ஈசாக்கு எப்படி இருப்பார் என்பதே தெரியாதே.
அது நமது மணவாளனை மனதில் நினைத்து கொண்டே, நமக்கு வந்திருக்கும் இந்த அழைப்பை ஏற்று கொண்டு பிரயாணத்தை இன்றே துவங்குவோம்.
வழியில் பிரச்சனைகள் வரலாம், குளிர் இருக்கலாம், சொந்தங்களால் தடுக்கப்படலாம்.
ஆனால், ரெபேக்கா ஒட்டகத்தில் ஏறினது போல, நாமும் சத்தியத்தில் ஏறினால் நிச்சயம் கிறிஸ்துவை அடைவோம்.
15. ஆடையும் அலங்காரமும்
ஆடை
ஈசாக்கை பார்த்தவுடன் ரெபேக்கா என்ன செய்தார்?
ஒட்டகத்தை விட்டு கீழே இறங்கி முக்காடு இட்டு கொண்டார்.
வாசிப்போம்
திருவெளிப்பாடு 19: 7
7 நாம் மகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக,அவருக்கு மகிமை சேர்ப்போமாக.
ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது, மணமகளும் மணக்கோலத்தில் தயாராக இருக்கிறாள்.
8 பளபளப்பான, சுத்தமான, உயர்தரமான நாரிழை உடையைப் போட்டுக்கொள்கிற பாக்கியம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உயர்தரமான அந்த நாரிழை உடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது” என்று சொன்னார்கள்.
சங்கீதம் 96: 9
பரிசுத்த உடையில் கடவுளை வணங்குங்கள். பூமியெங்கும் உள்ளவர்களே, அவர் முன்னால் நடுநடுங்குங்கள்!
நாமும் கடவுளுக்கு ஏற்ற பரிசுத்தமும் நீதியான வாழ்க்கையை கிறிஸ்து காணுமாறு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்
தலை அலங்காரம்
ஒரு மணப்பெண் தன் தலை முடியை மிகவும் நேர்த்தியாக அலங்கரித்திருப்பாள்.
அப்படி என்றால், நமக்கு எது தலை அலங்காரம்?

வாசிப்போம்
1 பேதுரு 1: 1-3
தலைமுடியைப் பின்னிக்கொள்வது, தங்க நகைகளைப் போட்டுக்கொள்வது,+ ஆடம்பரமான உடைகளை உடுத்திக்கொள்வது போன்ற வெளிப்புற அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாக இருக்க வேண்டாம்.
அதற்குப் பதிலாக, இதயத்தில் மறைந்திருக்கிற அமைதியும் சாந்தமுமான குணம்தான் உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்க வேண்டும்.
அதுதான் கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளது.
ஆம். மணமகளாக அழைக்கப்பட்டிருக்கும் நமக்கு அலங்காரமே அமைதியும் சாந்தமுமான குணம் தான்.
கழுத்து அலங்காரம்
நீதிமொழிகள் 3: 3
மாறாத கிருபையையும் சத்தியத்தையும் விட்டுவிடாதே. அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள். உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.
அவை உனக்கு வாழ்வு தரும். உன் கழுத்துக்கு அலங்காரமாக இருக்கும்.
ஆம். கிருபையும் சத்தியமும். கிருபை இல்லை என்றால் சத்தியம் கிடைக்காது. சத்தியம் இல்லை என்றால் கிருபை இருக்காது.
இவை இரண்டையும் நாம் எப்போதும் கழுத்தில் அணிகலன்களாக அணிந்திருப்போம்.
மூக்குத்தி
2 கொரிந்தியர் 2: 14
கடவுள் நம்மை எப்போதும் கிறிஸ்துவோடு வெற்றி ஊர்வலத்தில் நடத்திக்கொண்டு போவதற்காகவும், அவரை பற்றிய அறிவின் வாசனையை நம் மூலமாக எல்லா இடங்களிலும் பரப்புவதற்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன்.
நாம் எப்போதும் அவரை பற்றி அறிகிற அறிவை பற்றி சிந்திக்க வேண்டும்.
எங்கு அவரை பற்றி சரியான பகுத்தறிவோடு கூடிய சத்தியம் கிடைக்கிறது என்பதை நாம் தேடுவதே கிறிஸ்துவின் மணவாட்டியின் மூக்குத்தி அலங்காரமாக இருக்க வேண்டும்.

காலணி
எபேசியர் 6: 15
சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் ஆயத்தமாக நில்லுங்கள்.
நாமும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஆயத்தமாக இருக்க கடவோம். அதுவே நமக்கு காலணி/ செருப்பு.

இவை எல்லாவற்றையும் அணிந்த பின், மணமகள் அழுது கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
கூடாதல்லவா.
வாசிப்போம்
சங்கீதம் 119: 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்: ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.
நீதிமொழிகள் 17: 22
மகிழ்ச்சியான உள்ளம் நலமளிக்கும் மருந்து:
கிறிஸ்து விரும்பும் மணமகள் எப்போதும் முக மலர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
நாமும் மகிழ்ச்சியோடு சத்தியத்தில் பயணிப்போம்.
16. நறுமணம் வீசும் காணிக்கை

நெடுந்தூரம் பயணம் செய்து வந்த மணமகள் ரெபேக்காவை அருகில் வந்ததும் ஈசாக்கிற்கு பிடிக்க என்ன காரணம்?

எல்லா அலங்காரமும் செய்து விட்டு, நறுமணம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?

வாசிப்போம்
எபேசியர் 5:2
கிறிஸ்து நமக்காக நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.
எப்படி ரெபேக்காவின் குணமும், வாழ்க்கையும், விசுவாசமும், வாஞ்சையும் அவருக்கு நறுமணமாக இருந்ததோ,
நம்முடைய வாழ்வும், வாழ்க்கையும், குணமும், வார்த்தைகளும், சத்தியத்தின் மேல் உள்ள வாஞ்சையும் கடவுளுக்கு நறுமணம் வீசும் காணிக்கையாக வீசி கிறிஸ்துவின் மணவாட்டியாக ஆக மெனோரா ஒட்டகத்தில் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்வோம்.
பொறுமையுடன் சத்தியத்தில் உடன் பயணிக்கும் தங்களுக்கு கடவுள் ஆசீர் அளிப்பாராக.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

Comments