HANNAH, THE TAILOR

Hannah, the Tailor

Hannah, the Tailor

அன்னாள் எனும் தையல்காரி

அழைப்பைத் தைத்த தாய்
அழைப்பை அணிந்த மகன்

அன்னாள் தைத்த சின்ன சட்டை:
ஒரு தாயின் ஜெபம், மற்றும் ஒரு மகனின் அழைப்பு - நினைவு கூறப்படும் ஓர் நிலையாக தியானிக்கலாம்.


"அவன் தாய் ஒவ்வொரு வருஷமும் அவனுக்குச் சிறிய மேலங்கியைத் தைத்து, தன் புருஷனோடே ஆண்டு தோறும் பலியிட வரும்போது அதைக் கொண்டுவந்து அவனுக்குக் கொடுப்பாள்."
(1 சாமுயேல் 2:19)

முன்னுரை:

✍️ வேதாகமத்தில் சில நிகழ்வுகள் மிகச் சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றின் பின்னால் ஆழமான இறையியல், ஆவிக்குரிய வாழ்க்கைப் பாடம், மனித உணர்வு ஆகியவை மறைந்திருக்கின்றன.


அன்னாள் ஆண்டுதோறும் சாமுயேலுக்குத் தைத்துக் கொண்டு சென்ற "சிறிய மேலங்கி" அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றாகும்.


முதல் பார்வையில் அது ஒரு தாய் தன் மகனுக்குத் தைத்துக் கொடுத்த உடை மட்டுமே போல் தோன்றலாம்.
ஆனால் கவனமாக வாசிக்கும்போது, அதை தியானிக்கும் போது,
அது ஒரு தாயின் அன்பு,
தொடர்ச்சியான ஜெபம்,
கடவுள் அழைப்பின் மீதான விசுவாசம்,
மகனின் எதிர்கால ஊழியத்தின் மீதான நம்பிக்கை,
கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் அடையாளம்,
ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு அமைதியான சாட்சியாக விளங்குகிறது.


தாய் - சேய் பிரிவு தாங்கா துயரத்தை கொடுக்கும் ஓர் நிலையாகும்.

இந்த பிரிவு முதலில் முலை மறக்கடைக்கப்படும் நாட்களில் தன் ஆரம்பத்தை காணும்.

அடுத்து....
பிள்ளை பள்ளிக்கு செல்லுகையில்....
10 முறையாகிலும் தாய்க்கு சொல்லும் டா... டா... அவள் நெஞ்சத்தை இன்னும் பிள்ளையின் பால் கருணை கொள்ள செய்யும்.

அடுத்து...
அந்த குழந்தை வளர்ந்து....
தனக்கென்று நட்புறவுகளை ஏற்படுத்தும் போது...
இவள் மனம் கொஞ்சம் ஆட ஆரம்பிக்கும்.

கல்லூரி வாழ்வு கடந்து, வெளியூரில் வேலைக்கு செல்ல வேண்டி...
வீட்டை விட்டு பிள்ளை கிளம்புகையில்....
உள்ளத்தில் அழுவாள், ஆனால் வெளியே காண்பிக்காமல் இருந்து கொள்வாள்.
காரணம்...
பிள்ளையின் எதிர்காலம் தான் அவள் கண் முன் நிற்கும்.

அடுத்து...
திருமணம் என்று வந்து விட்டால்....
ஒரு வித பாதுகாப்பின்மை போல் அவள் மனம் வேதனைப்படும்.
தான் வளர்த்த பிள்ளை, தனித்துவம் கொண்ட ஆளுமையுடோராக சுய தீர்மானம் எடுக்கையில்...
அவர்களின் ஞானத்தை கண்டு மகிழ்வாள்.
ஆனாலும் தன்னிடமும் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்தால் நல்லது என்று யோசிப்பாள்.
இது தான் தாயுள்ளம்.
பிரிவின் படிநிலைகள்.


இப்படிப்பட்ட ஓர் பிரிவு நிலையை தான் தாய் அன்னாளும் சேய் சாமுயேலும் அன்று தேவாலயத்தில் சந்தித்திருப்பார்கள்.

முலை மறக்கடைக்கப்பட்ட கையோடு பிள்ளையை தேவாலயத்தில் கொண்டு விட்டுட்டு திரும்புகையில்...
அம்மா... அம்மா...
என ஒரு வேளை பாலகன் சாமுயேல் பின்னாலேயே ஓடி வந்திருக்கலாம்.
ஆனாலும்...
இனி அவன் கர்த்தருக்குரியவன்.
என்ற நிலைப்பாட்டில் அன்னாள் வீறு நடை போட்டு வீட்டிற்கு வந்துவிட்டாலும்....
பிள்ளையின் நினைவில் வாழ்ந்தவள்.


ஆகையால்.....

வருடமொரு முறை தேவாலயம் செல்லுகையில் ஓர் சின்ன சட்டையை தைத்து கொண்டு, அங்கு போய் அவனை பார்த்து விட்டு, முத்தமிட்டு, சட்டையை கொடுத்து விட்டு திரும்பி மன நிறைவோடு, அடுத்த ஆண்டு எப்பொழுது வரும் என வழிமேல் விழி வைத்து காத்திருந்து, அடுத்த முறையும் செல்லும் முன் வேறொரு சட்டை, ஆனா கொஞ்சம் பெருசா தைத்து கொண்டு போயிருப்பாள் அன்னாள்.


அன்னாள் தைத்து கொண்டு சென்றது வெறும் ஒரு சிறிய சட்டையா?
அல்லது ஊழிய அங்கியா?

"அவன் சிறுவனாயிருந்தும் சணல் நூலால் செய்யப்பட்ட ஏபோத்தைத் தரித்துக்கொண்டு கர்த்தருக்கு முன்பாக ஊழியஞ்செய்தான்."
(1 சாமு - 2 : 18)

அடுத்த வசனத்தில்,

"அவன் தாய் ஒவ்வொரு வருஷமும் அவனுக்குச் சிறிய மேலங்கியைத் தைத்துக் கொண்டுவந்து கொடுப்பாள்."

என்று வாசிக்கிறோம்.


இது.... சின்ன சாமுயேலுக்கு அவர் ஊழியத்தை நினைவூட்டும் மேல் அங்கியாக கூட இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இங்கு "மேலங்கி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை எபிரேய மொழியில் מְעִיל (Me'il) ஆகும்.
Strong's H4598

இந்த வார்த்தையின் பொருள்:

  • மேலங்கி (Robe)
  • கௌரவ ஆடை
  • அதிகாரத்தின் அடையாளம்
  • பதவியைக் குறிக்கும் அங்கி
  • விசேஷ அழைப்பின் வெளிப்புற சின்னம்

சில மொழியியல் அறிஞர்கள் இந்த வார்த்தையை,
"சுற்றி மூடுவது" அல்லது "மேலாக அணிவது" என்ற கருத்தோடும் இணைக்கின்றனர்.


அதாவது,
இது சாதாரண உடை அல்ல, மாறாக...

  • ஒருவரின் நிலை
  • பொறுப்பு
  • அழைப்பு

ஆகியவற்றை வெளிப்படுத்தும் நீளமான மேலங்கி.


Me'il மற்றும் Kethoneth – ஆகிய இரு வேறுபட்ட ஆடைகள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு முக்கியமான ஆடைப் பெயர்கள் காணப்படுகின்றன.

Kethoneth (כְּתֹנֶת)
இது உடலோடு நேரடியாக அணியப்படும் அடிப்படை அங்கி (Tunic).
சாதாரண மக்களும் அணிந்தனர்.
ஆசாரியர்களும் உள்ளாடையாக அணிந்தனர்.
அன்றாட பயன்பாட்டுக்குரிய உடை.


Me'il (מְעִיל)
இது அதன் மேல் அணியப்படும் மேலங்கி (Robe).
இதனை பொதுவாக,
பிரதான ஆசாரியர்கள்,
அரசர்கள்,
தீர்க்கதரிசிகள்,
உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் அணிந்தனர்.


எனவே, அன்னாள் தைத்தது ஒரு குழந்தையின் சாதாரண சட்டை அல்ல, மாறாக கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சாமுயேலின் ஊழிய வாழ்வை நினைவூட்டும் ஒரு "மேலங்கி" ஆகும்.


வேதாகமத்தில் Me'il அணிந்தவர்கள்:

ஆரோன் (யாத்திராகமம் - 28:31)
ஏபோத்தின் கீழ் அணியப்பட்ட நீல நிற மேலங்கி. அதன் ஓரங்களில் மாதுளம்பழ வடிவங்களும் பொன்மணிகளும் இருந்தன. அது பரிசுத்த ஊழியத்தின் அடையாளமாக இருந்தது.


சாமுயேல் (1 சாமுயேல் - 2:19)
அன்னாள் ஆண்டுதோறும் தைத்துச் சென்ற சிறிய Me'il.
அது, "இந்தப் பிள்ளை இன்னும் கர்த்தருக்கே சொந்தமானவன்" என்ற தாயின் அமைதியான விசுவாச அறிக்கையாக இருந்தது.


சவுல் (1 சாமுயேல் - 24:4–5)
தாவீது வெட்டியது சவுலின் மேலங்கியின் ஓரம். அது அரச அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.


தாவீது (1 நாளா - 15:27)
உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது Me'il அணிந்திருந்தார்.


தாமார் (2 சாமுயேல் - 13:18)
அரசகுமாரிகளின் கௌரவ உடையாகவும் Me'il பயன்படுத்தப்பட்டது.


அன்னாள் தைத்தது வெறும் துணியையல்ல மாறாக, அவள்:

  • விசுவாசத்தைத் தைத்தாள்.
  • ஜெபத்தைத் தைத்தாள்.
  • அர்ப்பணிப்பைத் தைத்தாள்.
  • மகனின் அழைப்பைத் தைத்தாள்.

"மகனே… நான் இன்னும் உனக்காக ஜெபிக்கிறேன்." என ஒவ்வொரு தையலும், சாமுயேலின் உள் மனதில் சொல்லியிருக்க கூடும்.

சீலோவில் வளர்ந்த ஒரு சிறுவன் சாமுயேல் தன் பெற்றோருடன் வளரவில்லை. அவன் கடவுளுடைய ஆலயத்தில் வளர்ந்தான்.

அவனுக்கு தாய் தினமும் அருகில் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் அவனுக்கென்று தாய் மூலமாக ஒவ்வொரு அங்கி கொண்டு வரப்பட்டது.

அந்த அங்கி சொல்லியிருக்கும்:

  • "நீ எங்களால் மறக்கப்படவில்லை."
  • "நீ ஜெபத்தின் பதில்."
  • "நீ நேர்ச்சைப் பிள்ளை."
  • "நீ கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டவன்."

என்று, அந்த அங்கியின் ஸ்பரிசம் அவருக்கு உணர்த்தி இருக்க கூடும்.

அந்த அங்கியை அணியும் ஒவ்வொரு முறையும் தாயின் கைகளின் தொடுதலையும், அவளுடைய கண்ணீரையும், அன்பையும் சாமுயேல் உணர்ந்திருக்கலாம்.


ஒவ்வொரு ஆண்டும் புதிய அங்கி கொண்டு வரப்பட்டது. ஏனெனில், சாமுயேல் வளர்ந்துகொண்டிருந்தான். பழைய அங்கி இனி பொருந்தாது.

👍 இது விசுவாச வாழ்க்கையின் அழகான உருவகம். கடவுள் நம்மையும் வளரச் செய்கிறார்.

அதற்கேற்ப,

  • புதிய கிருபை, புதிய பொறுப்பு,
  • புதிய வெளிப்பாடு, புதிய அனுபவம்,
  • புதிய அபிஷேகம்

ஆகியவற்றை அளிக்கிறார்.

"அவருடைய இரக்கங்கள் காலையிலே புதிதாயிருக்கிறது." (புலம்பல் 3:23)

நேற்றைய கிருபை இன்றைய பொறுப்பைச் சுமக்கப் போதாது.

நேற்றைய அனுபவத்தில் வாழாமல், இன்றைய கிருபையை அணிந்துகொண்டு நடக்கும்போது தான் விசுவாச வாழ்க்கை தொடர்ந்து வளர்கிறது.

அன்னாள் தைத்ததை சாமுயேல் பெட்டிக்குள் வைத்துவிடவில்லை. அதை அணிந்துகொண்டு கர்த்தருக்கு முன்பாக ஊழியம் செய்தான்.

இங்கே ஒரு முக்கியமான பாடம் உள்ளது.

கடவுள் அழைப்பைக் கொடுக்கிறார். பெற்றோர் அந்த அழைப்பை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பை அணிந்து வாழ வேண்டியது ஒவ்வொரு விசுவாசியினதும் தனிப்பட்ட பொறுப்பு.

அன்னாள் எத்தனை ஆண்டுகள் தைத்திருப்பாள்❓

வேதாகமம் அதற்கான சரியான எண்ணிக்கையை எமக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் சில குறிப்புகள் ஒரு நியாயமான கணிப்பைத் தருகின்றன.

சாமுயேல் பால்மறந்த பிறகு சீலோவிற்குக் கொண்டுவரப்பட்டார். (1 சாமு - 1:24)
அக்கால வழக்கப்படி அவன் சுமார் 2–3 வயதாக இருந்திருக்கலாம்.

பின்னர், 1 சாமுயேல் 3-ல் கடவுள் அவனை அழைக்கும் போது, பல அறிஞர்கள் அவன் 10–12 வயது சிறுவனாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இதன்படி, குறைந்தது 7 முதல் 10 ஆண்டுகள் வரை அன்னாள் ஆண்டுதோறும் அங்கியைத் தைத்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் வேதாகமம்.... "வருஷா வருஷம்..." என்று மட்டுமே கூறுகிறது. "பிறகு நிறுத்தினாள்" என்று எங்கும் சொல்லவில்லை.

எனவே, அவள் உயிரோடிருந்தவரை அல்லது சாமுயேல் முழுமையாக வளரும்வரை இந்த அன்பின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்திருக்கலாம் என்பதும் ஒரு சாத்தியமான கருத்தாகும்.

கடவுள் தமது மிகுந்த கிருபையால் மனிதனின் அவமானத்தை மூடியவர். இதை ஏற்று வாழாத எத்தனையோ பேர் முற்றும் துறந்த முனிவர்களாக, மாயையை பின்பற்றி தங்களுக்கு உண்டாகிய கிருபையை போக்கடித்து கொண்டு இருக்கின்றனர்.

பாவம் செய்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார். (ஆதி - 3 : 21)

பாவத்திற்குப் பிறகு.... மனிதனின் நிர்வாணத்தை, அவலட்சணத்தை முதன்முதலாக மூடியவர் கடவுளே.

ஆகையால் நிர்வாணம் ஆடையால் மூடப்பட வேண்டும்.

கடவுள் மனிதனுக்கு உடுத்துவித்தது கிருபையின் ஆடை.

அந்த கடவுளுடைய இரக்கத்தின் நிழலாகவே அன்னாளின் செயலைக் காணலாம்.

ஆடை – வேதாகமத்தின் ஒரு ஆவிக்குரிய உருவகம்:
வேதாகமத்தில் ஆடை என்பது, வெறும் உடை அல்ல. அது ஒரு ஆவிக்குரிய அடையாளம்.

  • ஆதாம் – ஏவாள்: ஆடை உடுத்துவிக்கப்பட்டனர் (கிருபையின் ஆடை).
  • யோசேப்பு உடுத்தி இருந்த ஆடை: உணர்த்தியது, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை.
  • பிரதான ஆசாரியர் உடுத்தி இருந்த ஆடை: பரிசுத்த ஊழியம்.
  • கெட்டுப்போன குமாரனுக்கு வழங்கப்பட்ட ஆடை: மீட்பின் மகிமையை வெளிகாண்பித்தது.

விசுவாசிகள்: "கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." (ரோமர் - 13:14) என்று போதிக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.

அன்னாள் தைத்த அங்கி கடவுள் அழைப்பின் நினைவூட்டலாக நிற்கிறது.

இன்றைய தாய்மார்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

அன்னாளைப் போல இன்றைய தாய்மார்களும் தங்கள் வளர்ந்த மகன்களுக்கும் மகள்களுக்கும் ஆண்டுதோறும் ஒரு சிறிய ஆன்மீகப் பரிசை வழங்கலாம்.

அது,

  • ஒரு வேதாகமம்,
  • ஒரு வசன அட்டை,
  • ஒரு ஜெபக் குறிப்பேடு,
  • ஒரு கிறிஸ்தவ புத்தகம், அல்லது
  • கையால் எழுதப்பட்ட ஆசீர்வாதக் கடிதம்

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

அந்தப் பரிசு, "நீ கிறிஸ்துவுக்குள் கடவுளுடைய பிள்ளை. பரிசுத்த வாழ்விற்கு அழைக்கப்பட்டவன்(ள்)" என்ற நினைவூட்டலாக இருக்கட்டும்.

முடிவுரை:

அன்னாள் தைத்த அங்கி சாமுயேலின் உடலை மூடியது. ஆனால் அன்னாளின் ஜெபம் சாமுயேலின் வாழ்க்கையை மூடியது.

அவள் துணியை மட்டும் தைக்கவில்லை.

  • ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைத் தைத்தாள்.
  • ஒரு தலைமுறையின் எதிர்காலத்தைத் தைத்தாள்.
  • ஒரு தாயின் விசுவாசத்தைத் தைத்தாள்.
  • ஒரு மகனின் அழைப்பைத் தைத்தாள்.

அன்னாள் ஆண்டுதோறும் தைத்த அங்கி, சாமுயேலின் உயரத்தை அளந்த ஆடை மட்டுமல்ல, அது.... கடவுளுடைய அழைப்பில் அவன் வளர்ந்து கொண்டிருக்கிறான் என்பதை விசுவாசக் கண்களால் அளந்த ஒரு தாயின் இதயச் சாட்சியாகும்.

அன்னாள் மேலங்கியைத் தைத்தாள், சாமுயேல் அதை அணிந்தான்.

தாய் தைக்கும் ஆடை காலத்தால் பழுதடையலாம், ஆனால்... தாய் ஜெபத்தால் தைக்கும் கடவுள் அழைப்பு தலைமுறைகளை மாற்றும்.

சாமுயேல் அந்த அங்கியை அணிந்தபோது, அவன் உடலை ஒரு துணி மூடியது ஆனால் அவன் உள்ளத்தை ஒரு தாயின் ஜெபம் மூடியது.

அன்னாள் தைத்தது ஒரு அங்கியை மட்டும் அல்ல. கடவுளுடைய அழைப்பில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு தீர்க்கதரிசியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறப்புற அவள் சேவையாற்றி நின்ற போற்றுதலுக்குறிய அன்னை அவள்.

சிறந்த அம்மாக்கள் யாவரும் தலைமுறையினரை செதுக்கி, உருவாக்கி, நிற்பவர்கள். அது அந்த பிள்ளையின் மனதில் நீங்கா நினைவலைகளால் ஆரம் போன்ற மாலை சூடி நிற்கும்.

நம்மிடம் / உங்களிடம் இருக்கும் மெய்யான விசுவாசத்தை நம் பிள்ளைகளிடம் மற்றொர் காணுமளவு உழைக்கிறோமா ❓
அண்ணாளின் விசுவாச வாழ்வும், ஜெப வாழ்வும் சாமுயேலில் பிரதிபலித்தது.

அன்னாளின் ஜெபம் சாமுயேலில் கனியாக வெளிப்பட்டது. லோவிஷாள் மற்றும் ஐனிக்கேயாளின் விசுவாசம் தீமோத்தேயுவில் தொடர்ந்தது.

அதுபோல,

கடவுளை நம்பும் ஒவ்வொரு தாய்மார்களின்....

  • ஜெபமும்,
  • விசுவாசமும்,
  • ஆவிக்குரிய வழிநடத்தலும்

தலைமுறைகளை உருவாக்கும் வல்லமையுடையவை.

ஒரு தலைமுறையை வடிவமைத்த தாய் அன்னாளுக்கு எங்கள் மரியாதை...! 🪡🧵👕🙌
(Hats off to... Hannah the Tailor)

✍️ Sis. Martha Lazar
New Jerusalem Church
Kodairoad branch
(*பெரோயா எழுத்து பணி*)

Tamil

Comments