
ஒரு மனிதரின் கடைசி வார்த்தைகள் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும். அவை அவர்களின் மனநிலையை, வருத்தங்களை, நம்பிக்கைகளை, மற்றும் விசுவாசத்தைக் காட்டுகின்றன. பைபிளில், விசுவாச வாழ்க்கை வாழ்ந்தவர்களின் இறுதி வார்த்தைகள் அவர்கள் அனுபவித்த பயணத்தையும், கடவுளுடன் கொண்ட உறவினையும் வெளிப்படுத்துகின்றன. மேலும், அவை நமக்கு என்ன பாடம் கற்றுக்கொடுக்கின்றது என்பதை சிந்திப்போம்.
1. யாக்கோபு (ஆதியாகமம் 49ம் அதிகாரம்)
யாக்கோபு இறப்பதற்கு முன்பு தனது பன்னிரண்டு மகன்களையும் ஆசீர்வதித்தார். ஆனால், ரூபென் செய்த பாவத்தை அவர் மறக்கவில்லை. அவர் சொன்ன வார்த்தைகளில் ஆசீர்வாதத்துடன், கண்டனமும் அடங்கியிருந்தது. எகிப்தில் அல்லாமல், தன் மூதாதையர் மண்ணில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறினார். அவரது இறுதி வாழ்க்கை பகுதி, தனது சொந்த மண்ணில் இல்லாத கவலை அவரது வார்த்தைகளில் நிரம்பியிருந்தது.
2. மோசே (உபாகமம் 31-33)
மோசே, தனது பணியை நிறைவு செய்யும் முன், பழைய உடன்படிக்கையை ஆசாரியர்களிடம் ஒப்புவித்தார். இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் பயணித்தபோதும், அவர் கானானுக்கு செல்லும் வாய்ப்பை தனது கோபத்தால் தவற விட்டார். அவர் ஒரு பாடலை பாடி, இஸ்ரயேல் மக்கள் எதிர்காலத்தில் கீழ்ப்படியாமையில் விழுவார்கள் என்று எச்சரித்தார். இந்த அவரது இறுதி வார்த்தைகள், கடவுள் இசுரயேலர் கீழ்படியாமல் போவார்கள் என்று கூறியதால், வருத்தத்தால் நிரம்பியிருந்தது.
3. யோசுவா (யோசுவா 23-24)
யோசுவா, தான் மரிப்பதற்கு முன்பாக இஸ்ரயேல் மக்களை கூட்டி, கடவுளின் உண்மையை நினைவுபடுத்தினார். அவர் அவர்களை உண்மையாக கடவுளை சேவிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர்களின் கீழ்ப்படியாமையின் போக்கை காணக் கூடும் என்று கண்ணியமாய் எச்சரித்தார். அவரது இறுதி வார்த்தைகள் அவர்களது அந்நிய தெய்வங்களை பற்றி கொள்வார்கள் என்ற கவலையை வெளிப்படுத்தின.
4. தாவீது (1 இராஜாக்கள் 2:1-9)
தாவீது தனது இறுதிநாளில், சாலொமோனை தைரியமாக இருக்குமாறு, கடவுளின் கட்டளைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர் சீமேயி அவரை தூஷனமாக பேசியதை பற்றி கூறியிருந்தார். தன் கடைசி தருணங்களிலும் கடந்த கால சம்பவங்கள் அவரை தொந்தரவு செய்தன. இதனால், அவரது மனதில் முழுமையான அமைதி இல்லை.
5. ஸ்தேவான் (அப்போஸ்தலர் நடபடிகள் 7:54-60)
இரத்த சாட்சியாக மரித்த முதல் விசுவாச வீரர். ஸ்தேவான், கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டார். அவர் இறக்கும் போது, இயேசு கிறிஸ்து கூறிய அதே வார்த்தைகளை உச்சரித்தார்: "அப்பா, இவர்களை மன்னியுங்கள்; அவர்கள் செய்வதை அறியாதிருக்கிறார்கள்." அவரது ஜெபம், அவரை கொலை செய்த சவுலின் (பவுல்) மனமாற்றத்திற்கு வழிவகுத்தது. அவர் வேதனையுடன் இறந்தாலும், அவரது வார்த்தைகள் மன்னிப்பு மற்றும் கடவுள் மீது கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்துகிறது.
6. பவுல் (திருத்தூதர் பணிகள் 20:17-38)(முழுமையாக வாசிக்கவும்)
பவுல், தனது இறப்பை முன்கூட்டியே உணர்ந்து, எபேசு மூப்பர்களை விடைபெற அழைத்தார். அவர் எதிர்காலத்தில் மந்தையை தப்ப விடாத கொடிய ஓநாய்களான டுபாக்கூர் போதகர்கள் வருவார்கள் என்றும் அவர்கள் மாறுபாடனாவைகளை போதிப்பார்கள் என்றும் எச்சரித்தார்.மேலும், இதுவே கடைசியாக சந்திப்பு என்று அவர் மரிப்பதை முன் அறிந்து கூறியது கேட்டவர்களுக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்கியது. அவர் இனி அவர்களை சந்திக்கமாட்டார் என்பதால், அவர்கள் அழுதார்கள். முத்தமிட்டு வழியனுப்பினார்கள். அவரது பிரிவில் சோகம் இருந்தது, ஆனால் கடவுளின் திட்டத்தில் அவரது பங்கை நிறைவேற்ற தம்மை முழுமையாக ஒப்பு கொடுத்து விசுவாசிகளுக்கு மாதிரியாக விளங்குகிறார்.

- "அப்பா, இவர்களை மன்னியுங்கள்; அவர்கள் செய்வதை அறியாதிருக்கிறார்கள்." (லூக்கா 23:34) – (வாசிக்கவும் திருத்தூதர் பணிகள் 3:17, 13:27), மக்கள் தங்களது அறியாமையில் மெசியாவை சிலுவையில் அறைந்தனர்.
- "இன்று, நீ என்னுடன் பரதீசில் இருப்பாய்." (லூக்கா 23:43) – சிலர் கள்ளன் உடனடியாக பரதீசு என்ற இடத்திற்கு சென்றான் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். இயேசு, உடனடியாக பரதீசுக்கு அழைத்துச் செல்லவில்லை, ஆனால் வரப்போகும் அரசாட்சியில் பங்குபெறுவான் என்ற உறுதிமொழியை கொடுத்தார்.
- "இவரே உம் தாய்." (யோவான் 19:26-27) – இயேசு தன் தாயை யோவானிடம் ஒப்புவித்தார், பெற்றோரை கணப்படுத்த வேண்டும் (யாத்திராகமம் 20:12) என்ற கட்டளையை நிறைவேற்றினார்.
- "என் இறைவா, என் இறைவா, எதற்காக என்னை கைவிட்டீர்?" (மத்தேயு 27:46) – நம் பரமதந்தை அவரை நொறுக்க சித்தம் கொண்டு, நமக்காக நமது பாவத்தின் சுமையை நமது ஆண்டவர் மீது ஏற்றினார்(எசாயா 53:10, 2 கொரிந்தியர் 5:21, கலாத்தியர் 3:13).கிறிஸ்து நமக்காக சாபமானர்.
- "எனக்கு தாகமாகிறது." (யோவான் 19:28) – இது அவரின் முழுமையான மனித தன்மையை வெளிப்படுத்துகிறது.
- "நிறைவு பெற்றது." (யோவான் 19:30) – சிலுவையில் மனுக்குல மீட்பு பணி முடிந்ததை இவ்வார்த்தைகள் அறிவிக்கிறது. (யோவான் 17:4).
- "அப்பா, உமது கரங்களில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்." (லூக்கா 23:46) – இயேசு தன்னை உயிர்த்தெழுப்புபவரிடம் தம்மை ஒப்புக்கொடுத்தார்.
படிப்பினை
இறுதி தருணத்திலும், கடவுளின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். நாமும் ஒப்புக்கொடுத்து, விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இறுதியாக, 1 பேதுரு 4:19 வசனத்தை நினைவில் கொள்வோம்: "ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத்தக்கவர். " நம் கடவுளாம் பரமதந்தை, நம்மை காத்து நடத்துவார். நம்முடைய இறுதி வரை நாம் நம்முடைய விசுவாசத்தை காத்து கொள்வோம்.
IN CHRIST
Praise The Lord
ReplyDelete