THE THREE SIGNS | மூன்று அடையாளங்கள் - EXODUS 4: 1 - 21

THE THREE SIGNS

THE THREE SIGNS

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் முந்தைய பாடத்தில்,
மோசே கண்ட மூலம்,
  • கடவுள், மோசேக்கு வெளிப்படுத்திய திட்டத்தையும்
  • திருச்சபையாக அழைக்கப்பட்டுள்ள சிறு மந்தைக்கு, அதில் மறைந்துள்ள மாபெரும் கடவுளின் திட்டத்தையும்,
  • அறிந்து கொண்டோம்.
    இந்த பாடத்தில், அதை தொடர்ந்து மோசே மூலமாக கடவுளின் தூதன் - அவர் மீது இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக செய்து காட்டிய மூன்று அடையாளங்களையும் - அதில் மறைந்துள்ள மாபெரும் கடவுளின் திட்டத்தையும் அறிய போகிறோம்.
    விடுதலை பயணம் 3: 16-17, 4:1-9
    முதலில், முழுவதுமாக மூன்று அடையாளங்களையும் வாசித்து விடுவோம்.
    அதன் பின், ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோமா?
    வாசிப்போம்:
    யாத்திராகமம் 3: 16,17
    16 போ.இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி,உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
    17 எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு-உங்களை நடத்திச் செல்வேன்”என்று அறிவிப்பாய்.

    யாத்திராகமம் 4: 1-9
    1 மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்: என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள்.ஏனெனில் ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை”என்று சொல்வார்கள்” என்று கூறினார்.
    2 ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.ஒரு கோல்”என்றார் அவர்.
    3 அதைத்தரையில் விட்டெறி”என ஆணை விடுத்தார் ஆண்டவர்.அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார்.அது ஒரு பாம்பாக மாறியது.அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
    4 ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார்.-அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார்.அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.
    5 “இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”.
    6 மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார்.அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார்.அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
    7 பின்னர் ஆண்டவர், “உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார்.மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
    8 அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
    9 அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய்.நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார்.

    முதல் அடையாளம்
    கோல் ➔ பாம்பு ➔ கோல்


    விடுதலைப் பயணம் 4:2,3,4 ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர்.
    'அதைத்தரையில் விட்டெறி'; என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.
    ஆண்டவர் அவரை நோக்கி, "நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார். அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.
    இந்த அருஞ் செயலில் - இரண்டு செயல்கள் நடைபெறுகின்றன.
    1. கையில் இருந்த கோல் - பாம்பாக மாறுகிறது.

    2. பாம்பின் வாலை பிடித்தவுடன், பாம்பு மீண்டும் கோலாக மாறுகிறது.
    இங்கு,
    மோசே- ஏதேனில் பூரணராக இருந்த ஆதாமை அடையாளப்படுத்துவார்.
    கோல்- என்பது அதிகாரத்தை குறிக்கும்.
    பாம்பு - பிசாசை குறிக்கும்.
    திருவெளிப்பாடு 12:9
    அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு.

    1.மோசே, கோலை கீழே போட்டவுடன் பாம்பாக மாறுவது,
    ஏதேனில், ஆதாமிடம் இருந்து அதிகாரம் சாத்தானிடம் சென்றதை குறிக்கிறது.
    ஏதேனில், கீழ்படியாமைக்குள் செல்லும் முன், ஆதாமிடம் அதிகாரம் (கோல்) கொடுக்கப்பட்டிருந்தது.
    ஆனால், அதை அவர் இழந்து போனதால்,
    அதிகாரம் பிசாசிடம் (உலகத்தின் அதிபதி) சென்றது.


    2. பாம்பின் வாலை பிடித்தவுடன், பாம்பு மீண்டும் கோலாக மாறியது
    சாத்தானின் ஆளுகை மீண்டும் இரண்டாம் ஆதாம் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் வரப்போவதை (கடவுளின் அரசாட்சியில்) அடையாளப்படுத்துகிறது.
    வாசிப்போம்
    ஆதியாகமம் 3: 15 அவர் உன் தலையை நசுக்குவார்.
    திருவெளிப்பாடு 20:2
    அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு.

    இரண்டாம் அடையாளம்
    தொழு நோய் மறைதல்


    விடுதலைப் பயணம் 4:6, 7
    மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையை உன் மடிக்குள் இடு" என்றார். அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.
    பின்னர் ஆண்டவர், "உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு" என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.
    கை = வல்லமை
    தொழு நோய் = பாவம்
    1. கையில் தொழு நோய் வருதல்
    ஆதாமின் கை - பாவம் இல்லாமல் இருந்தது.
    ஆனால், அவரது கீழ்படியாமையினால், அவருக்கு தொழு நோய் (குஷ்டம் = பாவம்) வந்தது.
    2. தொழு நோய் மறைதல்:
    கடவுளின் அரசாட்சி இல் மனுகுலத்தின் பாவம் (தொழு நோய்) நீங்கி போகும் என்பதை அடையாளப் படுத்துகிறது. 🙂
    மூன்றாவது அடையாளம்
    இரத்தமாக மாறிய தண்ணீர்


    விடுதலைப் பயணம் 4:9
    அப்போது ஆண்டவர், "அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!
    அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் (நிலத்தில்) ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் (நிலத்தில்) இரத்தமாக மாறிவிடும்" என்றார்.

    இந்த வசனங்கள் மூலம், செய்யப்படுகிற ஒவ்வொரு அடையாளத்திலும் மறைந்துள்ள பொருள் இருக்கிறதென்று அறிகிறோம். அதை இஸ்ரயேல் மக்களில் சிலர் புரிந்து கொண்டார்களென்றும் அறிகிறோம்.
    சிலர் இந்த இரண்டு அற்புதங்களின் பொருளை அறிந்து கொள்ளவில்லை ஆனால் மூன்றாம் அடையாளத்தை புரிந்து கொண்டார்கள் என்றும் அறிந்து கொள்கிறோம்.
    எகிப்தில் செய்யப்படும் இந்த மூன்றாம் அடையாளம்,
    மிதியான் நாட்டில் இருந்து எகிப்துக்கு வந்த மோசேவால் செய்யப்பட்டது.
    அதுபோல, இது இரண்டாம் வருகையில் பரத்தில் இருந்து உலகத்துக்கு வரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் செய்யப்பட போகிற அற்புதத்திற்கு அடையாளம்.
    தண்ணீர்: ஜனங்கள்/சத்தியம்
    நிலம்: உலகம்
    சிலருக்கு இரத்தம் அருவருப்பாக தெரியும்.
    ஆனால், இரத்தம் தேவைப்படுவோருக்கு அதுவே ஜீவன் அளிக்கும்.
    சத்தியத்தை மக்களிடம் கொடுக்கும் போது, அவர்களுக்கு அது அருவருப்பாக தெரியும். ஆனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு அதுவே ஜீவன் அளிக்கும்.
    இந்த மூன்றாவது அடையாளத்தை ஜனங்களின் மூப்பர் நம்புவார்கள். வாசிப்போம்
    1 பேதுரு 4:17
    ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
    பத்து வாதைகள்
    இந்த அற்புதங்களுக்கு பின்பு தான், 10 வாதைகள் துவங்கும். இந்த பத்து வாதைகள், திருவெளிப்பாடு புத்தகத்தில் கூறப்பட்டு உள்ள, 7 வாதைகளுக்கு ஒப்புமையாக உள்ளது.
    எப்படி, நதியின் நீர், எவ்வாறு நிலத்தில் ஊற்றியதும் எவ்வாறு இரத்தமாக மாறியதோ, அதுபோல, வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகில் மீது ஊற்றியதும் மனிதர் மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள் உண்டாயின என்று வாசிக்கிறோம்.
    வாசிப்போம்.
    திருவெளிப்பாடு 16:2
    உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டு அதன் சிலையை வணங்கி வந்த மனிதர்மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள் உண்டாயின.
    இது மோசே, எகிப்துக்கு திரும்பியதும் நடக்கும் அடையாளங்கள் ஆனதால், இது நம் ஆண்டவரின் இரண்டாம் வருகை நடந்த பின், நடக்க போகும் நிகழ்வுகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    அன்றைய சூனியகாரர்களும், இன்றைய கள்ள தீர்க்கதரிசிகளும்

    பார்வோனின் சூனியக்காரர்களும் அதே அற்புதங்களை செய்தார்கள் என்று வாசிக்கிறோம். மோசேயின் அற்புதத்தை அவர்களால் மேற்கொள்ள முடியாது.
    யாத்திராகமம் 7: 11,12
    10 ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
    11 பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான்.எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
    12 அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின.ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
    மத்தேயு 24: 24
    ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.
    2 தெசலோனிக்கேயர் 2: 8,9
    8 நெறிகெட்டவன் தோன்றுவான். ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார்: அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும். 9 அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான்.

    அன்புடையீர்...
    மோசேயின் மூலமாக கடவுள் அறிவித்திருக்கும் இந்த அடையாளங்களின் பொருளை மிகவும் திண்ணமாக நமக்கு அருளிய நம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
    மோசேக்கு கொடுக்கப்பட்ட மூன்று அடையாளங்கள், கடவுளின் திட்டம் காலங்கள் கடந்து எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைச் சாட்சியப்படுத்தும் அடையாளங்களாகவே இருக்கின்றது.
    அதேபோல, கடவுளின் திட்டமும், மனிதரின் எதிர்ப்பால் தடுக்கப்படுவதில்லை; மனிதரின் முயற்சியாலும் அவசரப்படுத்தப்படுவதில்லை. அது கடவுள் நிர்ணயித்த காலநேரத்திலேயே நிறைவேறுகிறது.
    பொய்யான அடையாளங்கள் எழலாம்; பலர் அதிசயங்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் கடவுளின் திட்டம், நாம் காணும் காட்சிகளின் மேல் அல்ல — அதில் மறைந்துள்ள சத்தியத்தின் மேல் நிலைத்துள்ளது.
    ஆகையால், நமது அழைப்பு அடையாளங்களை மட்டும் பார்ப்பதற்கல்ல; இறை வார்த்தைகள் கூறும் விசுவாசத்தில் காத்திருப்பதும் ஆகும்.
    ஆபகூக் 2: 3
    குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது.

    பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்


    Comments

    Post a Comment