QUIET - BE STILL | இரையாதே - அமைதலாய் இரு - MATTHEW 8: 23-27, MARK 4: 35-41, LUKE 8: 22-25

QUIET, BE STILL

QUIET, BE STILL

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
இந்த பாடத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள அழகான கலிலேயா ஏரியில், நம் ஆண்டவர் கடும் புயல் காற்றை அதட்டிய சம்பவத்தில்
  • மறைந்துள்ள கடவுளின் திட்டத்தையும்,
  • அதில் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடத்தையும்
  • அறிய இருக்கிறோம்.
    கலிலேயா ஏரி
    river of secrets, jordon
  • பைபிளில் இது கலிலேயா கடல் என்று அழைக்கப்பட்டிருந்தாலும், இது நன்னீர் ஏரி.
  • இந்த ஏரியில் உள்ள தண்ணீர், பனி நிறைந்த HERMON மலையில் உற்பத்தி ஆகி வரும் யோர்தான் நதியில் இருந்து வருகிறது.
  • (இந்த யோர்தான் நதியில் மறைந்துள்ள கடவுளின் திட்டம், பாடத்தில் உள்ளது. கண்டிப்பாக அறிந்து கொள்ளவும். நன்றி.)
  • அதனால் இந்த ஏரியின் தண்ணீர் மிகவும் தெளிந்த நன்னீராகவும் அதிகளவில் இருக்கும்.
  • இந்த கலிலேயா ஏரி - கடல் மட்டத்தில் இருந்து 700 அடி கீழே உள்ளது.
  • இது சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், அடிக்கடி புயல் காற்றும், சூறாவளிகள் இங்கு உருவாகிறது.
  • இந்த பாடத்தில், நம் ஆண்டவரின் ஊழியத்தின் இரண்டாவது ஆண்டு, நம் ஆண்டவரும் சீடர்களும் கலிலேயா ஏரியில் படகில் பயணித்த போது, ஏற்பட்ட புயல் காற்றை, நம் ஆண்டவர் அதட்டி அமைதி படுத்திய சம்பவத்தை நாம் அறிய போகிறோம்.
    மாற்கு 4: 35 - 41
    இந்த சம்பவம், மத்தேயு, மாற்கு, லூக்கா புத்தகங்களில் இருந்தாலும், நாம் இந்த பாடத்தில், மாற்கு எழுதிய வார்த்தைகளை கொண்டு படிப்போம். பின்பு, மற்றவையோடு ஒப்பிட்டு படிக்க போகிறோம். வாசிப்போம்...
    மாற்கு 4: 35-41
    35 அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார்.
    36 அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
    37 அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.
    38 அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
    39 அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
    40 பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.
    41 அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
    சம்பவத்தின் சுருக்கம்

    இங்கு படகில் ஏறிய நம் ஆண்டவர், அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது, புயல் காற்று வருகிறது.
    படகை ஒட்டிய சீடர்கள், எப்படியாவது சீக்கிரம் கரையை அடைய முயற்சித்தாலும், புயல் காற்று மிக அதிகமாக இருந்ததால், அவர்கள் பயத்தினால் நம் ஆண்டவரை எழுப்புகின்றனர்.
    நம் ஆண்டவர், அந்த புயலை "இரையாதே.. அமைதலாய் இரு" என்று அதட்டியவுடன், புயல் காற்று ஓய்ந்து போய், ஏரி நீர் அமைதலானது என்று நாம் வாசித்து அறிகிறோம்.
    ஏற்கனவே மீனவர்களாக இருந்த சீடர்கள், இந்த நிகழ்வை கண்டு திகைத்து நின்றார்கள்.
    இதற்கு பின், நம் ஆண்டவர்
    மாற்கு 4:40 அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.
    அப்படியான சூழ்நிலையில், அனைவருக்கும் பயம் வந்திருக்கும்.
    ஆனால், ஏன் நம் ஆண்டவர் ஏன் அஞ்சுகிரீர்கள் என்று கேட்டார்?
    ஏற்கனவே, அவர்கள் இதை விட பெரிய அற்புதங்களை அவர்கள் கண்டிருந்ததினால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் அச்சமற்றவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்ற நம் ஆண்டவரின் எண்ண வெளிப்பாடு தான் அது.
    மறைந்துள்ள திட்டம்
    கலிலேயா ஏரி என்பது எர்மோன் மலையில் உற்பத்தி ஆகி, வடக்கு (மேல்) யோர்தானில் பயணித்து வரும் தெளிந்த சுத்தமான நீர், தங்கி- நிரம்பி - தெற்கு (கீழ்) யோர்தானுக்கு கடந்து செல்லும் பகுதி.
    இங்கு எர்மோன் மலை என்பது கடவுள் வாசம் செய்யும் பரலோகத்திற்கு அடையாளமாக இருக்கிறது. வாசிப்போம்:
    சங்கீதம் 133:3
    அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் சீயோனிற்கு ஒப்பாகும்;
    ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.

    SEA OF GALILEE IN THE SHAPE OF HEART

    இந்த கலிலேயா ஏரி என்பது நம் இருதயம் போல.
    இந்த இருதயதிற்குள் - கடவுளிடம் இருந்து வரும் சுத்தமான சத்தியங்கள் தங்கி - பின், நம் மூலமாய் அதே சத்தியங்கள் கலங்காமல் பிறருக்கும் சென்றடைய வேண்டும்.
    நம்மிடம் இருந்து செல்லுவது, சத்தியங்கள் மட்டும் அல்ல.
    நம்முடைய வார்த்தைகள், கிரியைகளும் தான்.
    அது பிறருக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.
    வாசிப்போம்:
    மத்தேயு 5:16
    உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!
    அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
    நாம் பெற்றுக் கொண்ட சுத்தமான சத்தியத்தை, அதற்கேற்ற கிரியைகளோடு தாழ்மையுடனும், பயத்துடனும் மற்றவர்களுக்கு அறிவிக்க - நாம் கடமை பட்டிருக்கிறோம்.
    பிசாசினால் வரும் சோதனைகள்
    புயல் காற்று வீசுவது, ஒரு இயற்கையின் நிகழ்வாக இருந்தாலும், நம் ஆண்டவர் சோர்வுற்று உறங்கி கொண்டிருந்த போது புயல் வீசியது - நாம் சோர்வுற்றுக்கும் போது பிசாசினால் வரும் சோதனைகளுக்கு அதை அடையாளப் படுத்த முடிகிறது.
    நாம் இந்த விசுவாச ஓட்டத்தில் ஓடி கொண்டிருக்கும் போது, நமக்கு சோர்வுகள் நிச்சயம் வரும். அப்படியான நேரத்தில் தான், கடவுள் மேல் கொண்டுள்ள பற்றுதல், நம்மை கண்டிப்பாக விடுவிக்கும்.
    வாசிப்போம்:
    சங்கீதம் 107:228, 29, 30
    28 தம் நெருக்கடியில் அவர்கள்
    ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
    அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து
    அவர் அவர்களை விடுவித்தார்.
    29 புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;
    கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.
    30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;
    அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
    ஏசாயா 59:19
    வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய வல்லமை அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
    எபேசியர் 6:11
    அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.
    இரையாதே! அமைதியாய் இரு
    வீசிய புயல் காற்று, நம் ஆண்டவர் கட்டளை இட்டவுடன் நின்றது. அது போல, நமக்கு வரும் சோதனைகள், நம் ஆண்டவர் இடை பட்டவுடன் நம்மை விட்டு விலகி போகும்.
    வாசிப்போம்:
    ஏசாயா 43:1,2
    1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.
    2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;
    நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை;
    நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்;
    அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
    சோதனைகள் கற்று தரும் பாடம்
    நமக்கு வரும் சோதனைகள், நமக்கு ஒரு பாடம் கற்று தருவதற்காகவும், நம்மை விட்டு கடந்து செல்வதற்காகவுமே வருகிறது.
    துன்பம் வந்தால், அது வந்ததன் நோக்கம் முடிந்தவுடன், கண்டிப்பாக அது நம்மை விட்டு நீங்கி போகும்.
    வாசிப்போம்:
    யாக்கோபு 1:2,3
    2 என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.
    3 உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.
    1 பேதுரு 1:6,7
    6 இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
    7 அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.
    மூன்று வித கூப்பிடுதல் மற்றும் சீடர்கள்
    இங்கு, ஒவ்வொரு புத்தகத்திலும் சீடர்கள், நம் ஆண்டவரை எழுப்ப பயன்படுத்திய வார்த்தைகளை கவனியுங்கள்.
    முதல்
    வாசிப்போம்:
    மத்தேயு 8:25 சீடர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
    இந்த வார்த்தைகள், விசுவாசத்தின் கூப்பிடுதலாக உள்ளது.
    நம் ஆண்டவரை முழுமையாக பற்றி, அவர் நிச்சயமாக நம்மை காப்பாற்றுவார் என்ற விசுவாசம் கொண்ட சீடர்களின் வார்த்தையாக உள்ளது.
    நம்மிடையேயும், இப்படியான விசுவாசம் சிலரிடத்தில் உண்டு.
    இரண்டு
    லூக்கா 8:24 அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
    இது அவரது சீடரின் இன்னொரு வகுப்பார்.
    இவர்களிடம் காப்பாற்றும் என்ற வார்த்தை இல்லை.
    இதை நாம் சிறிய அளவிலான நம்பிக்கை கொண்டோர் என்று புரிந்து கொள்ளலாம்.
    இந்த வார்த்தைகள், ஆண்டவர் இடைபட்டாலும் காப்பாற்ற முடியாது என்கிற விசுவாசத்தை காட்டும் தொனியாக உள்ளது.
    இப்படி பட்டவர்களும் நம்மிடையே உண்டு.
    மூன்று
    மாற்கு 4:38
    போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
    இது நம் ஆண்டவரின் மீதே அவ நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளது.
    இது போலவும், நம்மிடையே சிலர் இருக்கிறார்கள்.
    நாம் இந்த மூன்று வகுப்பாரில், எந்த வகுப்பை சார்தவர்கள் என்று நிதானிப்போம்.
    இந்த மூன்று வார்த்தைகளில் எது சரியானது என்ற கேள்வி எழுமனால்,
    இந்த மூன்று வார்த்தைகளும் உன்மை தான்.
    இந்த மூன்று விதமான சீடர்களும் அப்போது இயேசுவோடு இருந்தார்கள்.
    இப்போது நம்மிடமும் உண்டு.
    “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?”(மாற்கு 4:40) என்று நம் ஆண்டவர் கேட்பது போல நாம் இருக்க வேண்டாம் என்பதே நமது படிப்பினை.
    உன்னை காக்கிறவர் உறங்கார்
    சீடர்கள் வந்த புயலை எதிர் கொள்வதற்கு தங்களால் முடிந்த அனைத்தும் தோல்வியுற்று, சாகும் தருவாயில், இறுதியாக தாங்கள் காப்பாற்றப்படுவதற்கு கண்டிப்பாக ஆண்டவரால் மட்டுமே முடியும் என்று முழு விசுவாசத்தோடு கூப்பிட்டு எழுப்பினார்கள்.
    நாமும், எப்படிபட்ட சூழ் நிலையில் இருந்தாலும், நம்மை காக்கிறவர் உறங்கார் என்ற விசுவாசத்தோடு அவரை நோக்கி கூப்பிடும் போது, நிச்சயம் நம்மை அழைத்தவர் நம் அருகிலேயே இருந்து நம்மை காப்பார்.

    வாசிப்போம்:
    சங்கீதம் 121: 3,4
    3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.
    4இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை.
    சங்கீதம் 23:4
    சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
    நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
    உமது கோலும், உமது தடியும் என்னை தேற்றும்.
    நாம் ஆண்டவரிடம் நம் பிரச்சனைகளை கொண்டு செல்லும் வரை தான், அது நமது நமக்கு பிரச்சனை.
    அவரிடம் நம்மை நாம் ஒப்பிடைத்து விட்டால், நமது வாழ்க்கையின் பாதுகாப்பு, நம் ஆண்டவர். வாசிப்போம்...
    1 பேதுரு 5:7
    7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
    மகா உபத்திரவ காலம்
    இந்த படகில் இருக்கும் சீடர்கள், கடும் புயலில் சிக்கிய இந்த நிகழ்வு - மகா உபத்திரவ காலத்திற்கும் ஒப்புமையாக உள்ளது.
    சுழல் காற்று = மகா உபத்திரவ காலம்
    சீடர்கள் = மனுக்குலம்
    வரப்போகும் மகா உபத்திரவ காலத்தில், மனுக்குலம் அனைத்தும் ஒழுங்கின்னமைக்கும் நிலையற்ற தன்மைக்கும் தள்ளப்படும் போது, தங்களால் தங்களை காப்பாற்ற முடியாத என்று சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு - கடவுளின் உதவி இல்லையேல், நாம் மீள முடியாது என்ற நிலைமை வரும்.
    அப்படி பட்ட சூழ்நிலையை மனுக்குலம் உணரும் போது தான், கடவுள் சூழ்நிலைகளை தமது கட்டுப்பாட்டில் அவரது உன்னத ஆற்றலால், மனுகுலத்தை முற்றிலும் காப்பாற்றுவார்.
    பின், இரையாதே! அமைதலாய் இரு என்று கூறியது போல, கடவுள் அமைதியான அவரது அரசாட்சியை இப்பூமியில் நிறுவுவார்;
    மனுக்குலம் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் கண்டடைவார்கள்; என்கிற தீர்க்கதரிசனமும் இந்த சம்பவத்தில் மறைந்துள்ளது. வாசிப்போம்:
    ஏசாயா 26: 3
    உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
    திருவெளிப்பாடு 7: 14 -17
    14 இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
    16 இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
    17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; கடவுள் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.
    நம்பிக்கை

    இந்த பாடம் - முடிவு காலங்களில் வாழும் நமக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
    வாசிப்போம்...
    பிலிப்பியர் 4:6,7
    6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கடவுளிடம் தெரியப்படுத்துங்கள்.
    7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

    நமது பரமதந்தைக்கும் இறை மகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
    ஆமென்.



    Comments