Little Flock - Millenium Post
STRANGE FIRE - PDF
கடவுளின் திட்டத்தைப் பேசும் எண்கள்!
7...8...14...33...66...80
எண்கள் கடவுளின் திட்டத்தை பேசுகிறதா?? ஆச்சரியம்! ஆனால் உண்மை! எப்படி???
லேவியராகமம் 12 ஆம் அதிகாரத்தில் கடவுள்; பிரசவித்த தாய்க்கு சில கட்டளைகளைக் கூறியுள்ளார்.
✨ஆண் குழந்தையை அவள் பிரசவித்தால்:
1. மாதவிடாய் காலங்களில் இருந்தது போல ஏழு (7) நாட்கள் தீட்டாக இருக்க வேண்டும்.
2. பின்பு 8 ஆம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும்! (இது கடவுளின் உடன்படிக்கைக்கு அடையாளம். முதலில் பிறக்கும் ஆண் பிள்ளை தேவனுக்கு சொந்தம்).
3. பின்பு 33 நாட்கள் தாய் தன்னை சுத்திகரிக்கும் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. பின்பு ஆசரிப்புக் கூடாரத்திற்க்கு சென்று பலியிட வேண்டும். (மரியாள் லூக்கா 2:22-24 நினைவிற்கு வருகிறது).
ஆண் பிள்ளை பெற்ற தாயின் சுத்திகரிப்பு காலம் = 7 + 33 = 40 நாட்கள்.
✨பெண் குழந்தையை அவள் பிரசவித்தால்:
1. 14 நாட்கள் தீட்டு (பெண் சந்ததியைக் கொடுக்கக் கூடியவள் என்பதால் இரட்டிப்பு தீட்டு).
2. 66 நாட்கள் சுத்திகரிப்பு.
3. பலியில் மாற்றம் இல்லை.
பெண் பிள்ளை பெற்ற தாயின் சுத்திகரிப்பு காலம் = 14 + 66 = 80 நாட்கள்.
8 ஆம் நாள்:
உடலின் அசுத்தமான பகுதி நீக்கப்படுவது போல, 8000 ஆண்டில் மனித குலமும் தேவனின் ராஜ்யத்தில் நுழையும் அடையாளம்.
14 ஆம் நாள்:
இஸ்ரயேல் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நிசான் 14ல் பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. அதேபோல் கிறிஸ்துவும் நம்மை மீட்டார்.
மத்தேயு 1 ஆம் அதிகாரத்தில் 14+14+14 தலைமுறைகள் காணப்படுகின்றன.
33 நாட்கள்:
33 நாட்கள் காத்திருந்த தாயைப்போல் கிறிஸ்துவும் 33½ ஆண்டுகள் வாழ்ந்து, தன் ஜீவனைத் தந்து நம்மை மீட்டார்.
40 நாட்கள்:
நோவாவின் பெருமழை, மோசேயின் 40 நாட்கள், இஸ்ரயேலின் வனாந்திரம், கிறிஸ்துவின் சோதனை ஆகியவை பாடுகளின் அடையாளம்.
ஆனால் இவை நம்மை புடம் போட்ட தங்கமாக ஆக்குகின்றன.
66 நாட்கள்:
66 புத்தகங்களைக் கொண்ட பரிசுத்த வேதாகமத்தின் அடையாளம்.
80 நாட்கள்:
இது 14 + 66 ஆகும். மோசே 80வது வயதில் அழைக்கப்பட்டார்.
தேவனின் 66 புத்தகங்கள் நம்மை சுத்திகரித்து, இறுதியில் எருசலேமாக மாற்றுகின்றன.
இதிலிருந்து கடவுளின் பிரம்மாண்ட ஞானத்தைக் கண்டு நாமும் வியக்கிறோம். காதுள்ளவன் கேட்கக்கடவன்!
ஜெபம்:
அப்பா! எங்கள் அன்பின் பிதாவே, மண்ணாகிய நாங்கள் பொன்னைப் போல விளங்கிட இத்தனை ரகசியங்களைத் திறந்துக் காட்டும் உமது கிருபைக்கு முன் எம்மாத்திரம்!
உங்கள் அன்பு மகனின் நாமத்தில் எங்கள் ஜெபம் கேளும்! நல்ல தகப்பனே... ஆமென்.
NUMBERS THAT SPEAKS HIS PLAN - PDF
சுத்திகரிக்கப்பட்டு மீட்டெடுக்கப்படுதல்!
லேவியராகமத்தின் 13 வது அதிகாரம் முழுவதிலும் தொழுநோய் எவை? தொழுநோய் அற்றவை எவை? அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கையாளும் வழிமுறைகள் என்ன? என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது!
முதலில் ஒரு நபருக்கு வந்துள்ளது தொழுநோய் தானா என அறிய அவர் ஆசாரியரிடம் சென்று தன் உடலில் தோன்றிய வெண் திட்டுக்களை காட்ட வேண்டும்!
அவரின் உடலில் தோன்றிய வெண்திட்டில், முடி வெள்ளையாகவோ, தோல் குழியாகவோ, இல்லாமல் இருந்தால் அவன் ஏழு நாள் தனிமைப்படுத்தப்படுவான்.
பின்பு ஏழநாள் கழிந்த பிறகு மீண்டும் ஆசாரியரால் சோதிக்கப்பட வேண்டும். வெள்ளை திட்டுகள் மேலும் பரவாமலும், ஆனால் திட்டுக்கள் மறையாமலும் இருந்தால்; மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த பட வேண்டும். பின்பு ஏழு நாள் கழித்து மீண்டும் சோதிக்கப்படும் போது, வெள்ளை திட்டுக்கள்(மங்கி) சுருங்கி இருந்தால் அவன் தீட்டற்றவன் அதாவது தொழுநோயால் பாதிக்கவில்லை என்று உறுதி செய்யப்படும்.
பின்பு, அவன் தன் ஆடைகளை நீரினால் கழுவி தன்னை தூய்மைபடுத்திக் கொள்ளலாம்.
ஆனால்; வெண்திட்டுக்கள் மேலும் பரவி; முடி வெள்ளையாகி; குழி அதிகமாகிக் கொண்டே போகுமாயின் அவன் தீட்டுள்ளவன். அதாவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவன்! அவன் தீட்டுள்ளவனாய் ஊருக்கு புறம்பே தன் நோய் தீரும் காலம் மட்டும் தனியே வாழ வேண்டும்.
ஒருவேளை அவன் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் தன் வாயை மூடி நான் தீட்டு! தீட்டு! என்று சத்தமிட்டு எச்சரிக்கை செய்ய வேண்டும்! ஏன் இப்படி என்றால் அவனின் குஷ்டம் ஒரு தனி நபரையோ அல்லது பொருளையோ பாதிக்கக்கூடாது என்பதால் தான்...
ஆனால்
ஒருவேளை அசிங்கப்பட்டு தன் குஷ்டத்தை ஒருவர் ஆசாரியர்களிடம் மறைத்தால்; அவரை தண்டிக்க ஆசாரியருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் அந்த இடத்தை விட்டுக் கூட துரத்தப்படலாம். (எண் 5:2-4)
ஏனெனில் இந்த குஷ்டம் அவரை மட்டுமல்ல; முழு சமுதாயத்தையும் பாதித்துவிடும் என்பதாலும்;
கடவுளின் பரிசுத்த ஸ்தலத்தில் அசுத்தம் கூடாது என்பதாலும்!
உதாரணம்: உசியா ராஜா! (2 நாளாகமம் 26:29-21)
உங்களின் தேடலுக்கு...
வீட்டு சுவர்கள், ஆடைகள், கொப்புளங்கள், தீக்காயங்கள்; உச்சந்தலை முடி கொட்டுதல், தாடி, வெண்புள்ளிகள் இவையெல்லாம் குஷ்டமா இல்லையா என்பதைக் கண்டறிய சில விதிமுறைகள் இந்த அதிகாரத்தில் தரப்பட்டுள்ளது. படித்து தெளிவு பெறலாம்.
எபிரேயத்தில் Tzara'at என்று சொல்லப்பட்ட தொழுநோயும்;
தற்போது நவீன காலத்தில் Hansen's diseases ம் (தொழுநோய்) ஒன்று தான். ஆனால் சில வித்தியாசங்கள் இருக்கிறது. விளக்கம் PDF ல் விரிவாக உள்ளது.
சரி.. இப்போது கடவுளின் தெய்வீக திட்டத்திற்க்குள் வருவோம்...
ஆதாமின் அசுத்தத்தால் (கீழ்படியாமையால்) ஒட்டுமொத்த மனித குலமே அசுத்தத்திற்க்கு (பாவத்தினால் உண்டான மரணம்) ஆளாகியது.
ஆதாம் - கடவுளின் பிரசன்னத்தை இழந்தது போல மனிதகுலமும் இழந்தது!
ஆனாலும், கடவுளின் அன்பும் அருகாமையும் நம்மை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது...
பழைய ஏற்பாட்டில், வனாந்திரத்திலும், கூடாரத்திலும் தொடர்ந்ததைப் போல, புதிய ஏற்பாடு காலத்தில் அவரின் குமாரன் மூலமாகவும்; அவரின் பரிசுத்த ஆவியால் நம்முள் தங்குவதன் மூலமாகவும்...
ஆனாலும் தீட்டுப்பட்ட மனிதனாகவே, ஒட்டு மொத்த மனித குலமும் நீண்ட தனிமையில் வாழ்ந்து, தனது முழு பரிசோதனை மற்றும் மறுசீரமைப்பின் நாளுக்காக காத்திருக்கின்றது!
இதில் அருமையான ஆவிக்குரிய சத்தியங்கள் உள்ளடங்கியுள்ளது. குஷ்டம் வந்தவர் 6 நாட்கள் தீட்டுப்பட்டு இருந்தது போல...
6000 ஆண்டுகள் மனுகுலமும் பாவத்தின் விளைவாய் வந்த துக்கத்தாலும்; உழைப்பாலும் சோர்வுற்று இருந்தது.
7 ம் நாள் ஓய்வு.
அதாவது,
7 வது ஆயிரம் ஆண்டில் மேசியாவின் ஆட்சியில் அமைதி காலம் வருகிறது.
இந்த ஏழாம் நாளில் தான் நம் ராஜாவும், பிரதான ஆசாரியருமான கிறிஸ்து நம்மை
*ஆராய்கிறார்!
*குணப்படுத்துகிறார்!
*மீண்டும் கட்டுகிறார்!
கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சி காலத்தின் தொடக்கத்தில் இருந்து கடவுளின் ராஜ்ஜியத்தைப் பற்றிய சத்திய அறிவு படிப்படியாக முன்னேறி இப்போது சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது!
அதனால், ✨பொய் போதனைகளால்; மூடப்பட்ட கண்களும்; காதுகளும் திறக்கப்படுகின்றது...
✨சத்தியத்தின் பாதையில் செல்லாமல், முடங்கி கிடந்த கால்கள் பலமடைகிறது!
✨சாபத்தாலும் பாவத்தாலும் பாதிக்கப்பட்ட குஷ்டம் குணமாக்கப்படுகிறது!
தங்கள் ஆடைகளை துவைத்து தூய்மையாக்கிய பின்பே, குஷ்டம் குணமானவர்கள், ஆசாரியனால் பாளயத்துக்குள் உள்ளே மீண்டும் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அப்படித்தான் நாமும் ஆதாமிலிருந்து பிறந்து, அவரின் கீழ்படியாமையால் சாபத்தை பெற்று கடவுளின் அருகாமையை விட்டு விலக்கி வைக்கப்பட்டோம்.
ஆனால் நம் அன்பான தகப்பன், தன் அருமைக் குமாரனால் நாம் மீண்டும் தேவனிடம் நெருங்க வாய்ப்பை திறந்தார்!
அது தான் மீட்கும் பொருள்! நம் கிறிஸ்துவின் ஜீவ பலி.
கிறிஸ்துவின் இரத்தத்தாலே..
நாம் கழுவப்படுகிறோம்!
சுத்திகரிக்கப்படுகிறோம்!
இரட்சிக்கப்படுகிறோம்!
குணமாக்கப்படுகிறோம்!
புது சிருஷ்டிகளாக மாற்றப்படுகிறோம்!
ஆனால்...
நாம், நமது நீதியின் வஸ்திரங்களை கறை படுத்தாமல் காத்துக் கொள்ளும் போதே, தைரியமாக கிருபையின் சிங்காசனத்திடம் வரும் பேறு பெற்றவர்களாகிறோம்.
மேலும் பல விளக்கங்கள்...
🔎🔎🔎
உங்களின் புரிதலுக்கு இப்பாடத்தில் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது!
படித்து,புது சிருஷ்டிகளின் ஓட்டத்தில் கறைகள் அற்று ஓடி, வெண்மையான இதயத்துடன், கடவுளிடம் சென்றடைய... கடவுள் தாமே நம்மை வழி நடத்துவாராக..
ஆமென்!
CLEANSED AND RESTORED - PDF
சுத்திகரிக்கப்பட்ட குஷ்டரோகி (பகுதி 1)
குணமடைந்த தொழுநோயாளியை சுத்தப்படுத்தும் சடங்கு! லேவியராகமம் 14 ஆம் அதிகாரத்தில் இந்த சடங்கை குறித்து தேவன் சில கட்டளைகளை மோசேவிடம் கூறியிருந்தார்!
அவைகளை குறித்து தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்!
இந்த சுத்திகரிப்பு மற்றும் மீட்பின் சடங்கு! உண்மையில் அந்த குணமடைந்தவருக்கு ஒரு மனமகிழ்ச்சியின் சடங்காகவே இருந்திருக்கும் என்றால் அது மிகையல்ல...😊
எப்படி?
சற்றே நாம் கற்பனை செய்து பார்ப்போம்!
கொடூரமான குஷ்டரோகத்தால் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு, தன் வீட்டில் உள்ள அன்பானவர்களை விட்டு பிரிந்து, ஊரை விட்டு ஒதுங்கி, அசுத்தங்கள் கொட்டப்படும் பாளயத்திற்க்கு வெளியே, யாருடைய அன்பும்; அரவணைப்பும்; இன்றி இவ்வளவு வருடம் மனவேதனையுடன் இருந்த ஒருவர்,
கடவுளின் கருணையால் குஷ்டம் நீக்கப்படுகிறார்.
மீண்டும் தன் வீட்டிற்க்கு திரும்ப வேண்டுமென்றால், சில சடங்குகளை செய்யும்படி தேவன் கொடுத்த கட்டளைகளை எவ்வளவு மனமகிழ்ச்சியுடன் செய்து முடிப்பார்...
அதனால் தான், இதனை மனமகிழ்ச்சியின் சடங்காக கூறினாலும் மிகையாகாது என்றேன்!
சரி இப்போது விதிமுறைகளுக்கு வருவோம்...
முதலில் ஆசாரியர் குஷ்டம் நீக்கப்பட்டவரை பாளயத்திற்க்கு வெளியே சென்று சந்திக்கிறார்! மற்றவர்களிடம் விலகி இருந்தே அவனை பரிசோதிக்கிறார்!
உண்மையில் நோய் குணமாகிவிட்டது என்று தெரிந்ததும், ஆசாரியர் சுத்திகரிப்பு சடங்கை தொடங்குகிறார்...
எப்படி??
குணமானவரிடம் சில பொருட்களை கொண்டு வரும்படி கூறுகிறார்..
அவைகள்:
1. உயிருள்ள சுத்தமான பறவை வகைகளில் இரண்டு.
2. கேதுரு மரக்கட்டை ஒரு துண்டு.
3. சிகப்பு நூல்.
4. ஈசோப்பு ஒரு கொத்து.( மருத்துவ குணமுள்ள ஒரு வகைச் செடி)
பின்பு இவற்றைக் கொண்டு சடங்கை இரு வகையாக ஆசாரியர் பிரிக்கிறார்.
எப்படி???
முதல்படி:
இரண்டு பறவைகள் மற்றும் தெளித்தல்:
♦️பறவைகளில் ஒன்று, சுத்தமான நீர் நிறைந்த மண்பாத்திரத்தில் கொல்லப்படுகிறது.
பின்பு அதில் உயிருள்ள மற்றொரு பறவை, கேதுரு கட்டை, ஈசோப்பு செடியை, மண்பாண்டத்தில் உள்ள இரத்தத்தில் மூழ்கச் செய்யப்படுகிறது.
(இங்கு நீர் வேதத்தில் ஜீவநீர் என்று கூறப்பட்டுள்ளது.. அதாவது எங்கும் தேங்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நீர்)
♦️பின்பு ஆசாரியன் அந்த இரத்தத்தை எடுத்து ஏழுமுறை குணமடைந்தவர் மேல் தெளித்து, இவர் இப்போது சுத்தமானவர் என்று அறிவிக்கவேண்டும்!
♦️பின்பு உயிருள்ள பறவை சுதந்திரமாக வெளியே பறக்க விடப்படுகிறது!
✨அதன் பொருள்: இந்த மனிதனின் அசுத்தம் அகற்றப்பட்டு, சுதந்திரமாக்கப்பட்டான்! அவன் இழந்த வாழ்க்கை திரும்ப கிடைத்தது என்று பொருள்!
2ம் படி:
சுத்தம் செய்தல் மற்றும் காத்திருத்தல்!
இதில் செய்யவேண்டிய நடைமுறைகள்:- 1. தனது ஆடைகளை துவைக்க வேண்டும்!
2. தன் உடலில் உள்ள எல்லா முடிகளையும், புருவத்தின் முடிகளையும் சேர்த்து வழித்து எடுக்க வேண்டும்.
3. நீரில் முழுமையாக குளிக்க வேண்டும்.
4. மீண்டும் ஏழு நாட்கள் அவன் தன் கூடாரத்துக்குள் தங்கி இருக்க வேண்டும்.
😲 ஏன் மீண்டும் ஏழு நாட்கள் தனியே???
ஏன்? இந்த புருவமுடிக் கொண்டு நீக்கும் முறை... என்று சிந்திப்போமாகில்..🤔
அதற்கான விடைகள், இந்த பாடத்திலிருந்து நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்...😊....👍
சரி இறுதியாக...
இந்த சடங்கில் மறைக்கப்பட்டுள்ள ஐந்து பாடங்கள்..
📌இது வெறும் பாடங்கள் மட்டும் அல்ல...என்றும் அழியாத மீட்பின் இரகசியங்கள்!
1. சுத்தமான ஆசாரியர், அசுத்தமானவரிடம் செல்கிறார்! பொருள்:-மீட்புக்காக கடவுளே நம்மைத் தேடி வருதல்!
2. ஒரு பறவை, ஜீவநீர் நிறைந்த மண்பாண்டத்தில் கொல்லப்படுகிறது! பொருள்:- தேவனின் உண்மையான சுத்திகரிப்பு, தூய வாழ்வு, தியாகத்தின் எதார்த்தம்
3. உயிருள்ள மற்றொரு பறவை, கேதுரு மரத்துண்டு, சிவப்பு நூல், ஈசோப்பு செடி , ஜீவநீரும், இரத்தமும் கலந்த நீரில் மூழ்க வைக்கப்படுகிறது. பொருள்:- பரிசுத்தம், வலிமை, தியாகம், சுத்திகரிப்பு!
4. ஆசாரியர் இந்த நீரை ஏழுமுறை குணமானவர் மேல் தெளிக்கிறார்! பொருள்:- முழுமையான சுத்திகரிப்பு!
5. இரண்டுமுறை மொட்டையடித்தல்; முதலில் சுத்திகரிப்பு நாளிலும், மீண்டும் ஏழாவது நாளிலும்! பொருள்:- பழைய பிழைகளை அழித்து, புதிய துவக்கத்தை மேற்க்கொள்ளுதல்.
இது எளிமையான சுருக்கம் தான். விவரங்கள் அருமையாக உள்ளே...✍🏻
சரி.. இன்று நிழல் பார்த்தோம்...
இதற்க்கான ஆவிக்குரிய விளக்கங்கள் நாளை...
ஜெபம்:
♥️எங்கள் அன்பின் பிதாவே, வார்த்தைகள் வரவில்லை ஐயா...
கண்களில் கண்ணீர் தான் பெருகுகிறது...
எங்களுக்கு இவ்வளவு பெரிய பாக்கியத்தை தந்து, உங்கள் அருமையான அன்பின் திட்டங்களை நீர் விளக்கிக் கொண்டிருக்கும் உமது பேரன்பிற்க்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம்!
நன்றிகள் கூறிக் கொண்டே இருப்பதை தவிர வேறு என்ன செய்யப்போகிறோம்! அப்பா...
உமக்கு நன்றி!
உங்கள் அருமை மகனை தந்ததற்க்காய் நன்றி!
எங்களை பாவத்தில் இருந்து மீட்டெடுத்ததற்க்காய் நன்றி!
கரம் பிடித்து எங்களை சத்தியப்பாதையில் வழிநடத்திச் செல்வதற்க்காய் நன்றி!
THE CLEANSED LEPER_PART 1
Comments
Post a Comment